பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 4 வாரங்களில் மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கு தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்.மாணிக்கவேல் நியமனம்:
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் ஐ.ஜி. பொன்.மணிக்கவேல் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி, தமிழக அரசு அரசாணை மூலம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்தது
இந்நிலையில் கடந்த 30-ம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த பொன்.மாணிக்கவேலை, மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும், பொன் மாணிக்கவேலுக்கு பணிநீட்டிப்பு வழங்குவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நாகேஸ்வரராவ் அமர்வில் இன்று காலை 10-30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு ஆரம்ப கட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.4 வாரங்களில் மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.