வெளிநாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 3 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழுவினர் கடந்த 6ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது, 3 அடி உயர திரிபுராந்தகர், 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி, 3.25 அடி உயர ரிஷபதேவர், தலா 2.75 அடி உயர மூன்று அம்மன் சிலைகள் என ஆறு உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த, சேலம், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்,42, மயிலாடுதுறை கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லட்சுமணன், 5 ஆண்டுகளுக்கு முன், புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது ஆறு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அதனை அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
இது குறித்து தனது நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். ராஜேஷ் கண்ணன், லட்சுமணனின் மருமகனான சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகனுடன், லட்சுமணன் வீட்டிற்கு வந்து சிலைகளை பார்த்தனர். மூவரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டனர். ராஜேஷ் கண்ணனுக்கு சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் தொடர்பு கிடைத்தது. அதன்படி, ராஜேஷ் கண்ணனும், திருமுருகனும் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவரது காரில் மயிலாடுதுறை கொருக்கை கிராமத்தில் உள்ள லட்சுமணன் வீட்டிலிருந்து, சிலைகளை எடுத்துக்கொண்டு திருச்சி வழியாக சென்னை செல்லும்போது பிடிபட்டனர்.
இது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரையும் கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆறு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களை, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“