IE Tamil Facebook Live Exclusive Nanjil Sampath experience with DMK, ADMK leaders : கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த லாக்டவுன் பொழுதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நாள்தோறும் வாசகர்களையும் பிரபலங்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள், சமையற்கலைஞர்கள் உட்பட பலரும் தங்களின் தனிப்பட்ட துறைசார் அனுபவம் மற்றும் லாக்டோன் அனுபவம் குறித்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முகநூல் நேரலையில் நம்முடன் பங்கேற்றார் நாஞ்சில் சம்பத் அவரிடம் வாசகர்கள் கேட்ட கேள்விக்கும் அவர் தந்த சுவையான பதில்கள் இங்கே!
மேலும் படிக்க : கொரோனாவை விட பசி கொடியது : நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்!
செந்தமிழே உயிரே வணக்கம் என்று தன்னுடைய உரையை துவங்கினார் நாஞ்சில் சம்பத். அவரிடம் திமுக, அதிமுக, கட்சி தலைவர்கள், அரசியல் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. ஸ்டாலினை ஓரங்கட்டினால் திமுகவை ஓரங்கட்டிவிடலாம் என்ற நிலை உருவானால், தமிழகத்தில் ஃபாசிசம் உருவாகும். இதனை தடுக்கும் ஒரே அரணாக இருப்பது திமுக தான் என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
மிகப்பிடித்த பேச்சாளன்
பிரச்சார செயலாளராக திருச்சி செல்வேந்திரன். வைகோ பேசினால் நாகர்கோவிலில் இருந்து பொன்னாமராவதி சென்று, அதை கேட்டுவிட்டு, இரவில் லாரி பிடித்து வீடு திரும்பிய கதையெல்லாம் உண்டு. அதிமுகவில் இருந்து வெளியேறிய பின்பு, பல்வேறு இலக்கிய மேடைகளில் நான் பேசி வருகிறேன். இலக்கிய மேடைகளில் அரசியல் பேச மாட்டேன். ஆனால் அரசியல் கூட்டத்தில் இலக்கியத்தை மேற்கோள் காட்டத் தவறியதில்லை.
கொரோனா வைரஸூம் வகுப்பு வாத அரசியலும்
தப்லிகி ஜமாத் பற்றி கேள்விபட்டதில்லை. நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அமைப்பு என்று எனக்கு தெரியாது. அங்கு சென்று வந்த இஸ்லாமியர்களால் தான் இந்நோய் பரவி வருகிறது என்று மக்கள் மத்தியில் வகுப்பு வாத அரசியலை திணிப்பது வேதனை அளிக்கிறது. பிற்கால சந்ததியினர் இப்படியான மலிவான அரசியலில் ஈடுபட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பதும் வேதனை அளிக்கிறது.
போர்கள் வராது! ஆனால்?
நமஸ்தே ட்ரெம்ப் நிகழ்ச்சியின் போது இந்தியாவும் அமெரிக்காவும் 23 ஆயிரம் கோடிக்கு ஆயுத ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. ஃபிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பெருங்கொள்ளை நோயில் இருந்து நாட்டின் மக்களை காக்க, மருத்துவ தேவைகளுக்கான உபகரணங்கள் இல்லாமல் இருப்பது வெட்க கேடு. பசியில் இருந்தும் பட்டியினியில் இருந்தும் விடுதலை பெறவில்லை என்று நமக்கு இப்போது புரிகிறது.
கொரோனாவும் நாஞ்சில் நாடும்
அதிக அளவு இங்கு ரப்பர் விவசாயம் செய்யப்படும். பங்குனி உத்திரம் முடிந்த கையோடு விவசாயிகள் ரப்பர் வெட்ட செல்வார்கள். ஆனால் அதன் பயன்பாடும், பாதுகாக்க இருக்கும் கடைகளும் மூடப்பட்டிருப்பதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பலா, அன்னாட்சி, மரவள்ளிக் கிழங்கு போன்றவை விவசாயம் செய்து வீணாய் போகும் நிலையில் தான் இருக்கிறது. கைதட்டுங்கள் என்கிறார்கள் கைத்தட்டினோம். விளக்கு ஏற்றுங்கள் என்றார்கள் ஏற்றினோம். ஆனால் மனதில் அண்டிக் கிடக்கும் சோகத்திற்கும் பசிக்கும் பதில் என்ன?
ரேபிட் கிட்கள் - கவனம் செலுத்த தவறிவிட்டோம்
கொரோனா வைரஸை பரிசோதிக்கும் கருவிகள் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள் என்பதை விட, சோதனைக்கு உகந்ததா என்பதை நாம் பரிசோதிக்க தவறிவிட்டோம். கொரோனாவுக்கு பின்னான காலங்கள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
வைகோவுடனான நட்பு குறித்து கொஞ்சம் கூறுங்கள்?
கால்சட்டை பருவத்திலேயே வைகோவை காதலித்தவன் நான். எங்கள் கல்லூரியில் நேற்று இன்று நாளை தலைப்பில் அவர் பேசிய போது அந்த பேச்சை கேட்டு பிரமித்து போனவன் நான். எமெர்ஜென்ஸி காலத்தில், பொது கூட்டம் போட அனுமதி மறுத்த அக்காலத்தில் நெல்லை பாப்புலர் திரையரங்கில் கலைஞர் பேச வந்த போது, அவரை மேடைக்கு அழைத்து வந்து, கலைஞரை வைகோ பேச வைத்த அழகு என்னை வெகுவாக ஈர்த்தது. அரசியல் வாழ்வை தேடிக் கொள்வதற்கான நுழைவு வாயிலை அந்நிகழ்வு தான் நிகழ்த்தியது. வைகோவின் பேச்சு காதலன். அவர் வாழ்நாள் முழுமையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். தேவையை நிறைவேற்றுங்கள் என்று என் உழைப்புக்கான ஊதியம் கேட்டேனா? அவரின் இடத்திற்கு ஆசைப்பட்டனா? உலகம் முழுவதும் அவரின் புகழ் தான் பேசினேன். ஆவி போகும் காலம் வரை அவருடன் இருக்கவே ஆசைப்பட்டேன். ஆனால் வேதனையோடு துரத்தப்பட்டேன். என்னுடைய ஆசை நிறைவேறவில்லை. வெளியேற்றப்பட்டேன். இருப்பிற்கு ஆபத்து வந்த போது, என் சுயமரியாதை முக்கியம் என்று வெளியேறிவிட்டேன். அடிக்கடி அவர் உடல் நலம் குறித்து வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கிறது. தென்னகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் அவர் சிறப்பாக செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் ஸ்டாலின் நடவடிக்கைகள் எப்படி?
<\அரசாங்கம் செய்யாததை, ஸ்டாலின் தலைமையிலான திமுக செய்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சி, எதிர்கட்சியினர் கூட்டத்தை கூட்டி, எங்களின் கருத்துகளை கேளுங்கள் என்று கூறிய ஸ்டாலினின் ஜனநாயக குரலை ஆளும் கட்சி செவிமெடுக்கவில்லை. Democracy means discussion- விவாதித்து, ஒரு காரியத்தை முன்னெடுப்பது தான் அறம். அதற்கும் இங்கு வழியில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை எதிர்கட்சியினர் செய்து வருகின்றனர். ஒரு அரசு செய்ததை விட எதிர்கட்சி செய்திருக்கும் உதவி பேருதவி. உதவி செய்பவர்களுடன் தினமும் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலினின் பணிக்கும், ஜனநாயக பாங்கிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு தந்த திமுக கரை வேஷ்டி எங்கே?
தம்பி உதயநிதி ஸ்டாலின் அளித்த அந்த வேஷ்டியை நான் உடுத்தவில்லை. என்னிடம் தான் மிகவும் பத்திரமாக இருக்கிறது. களைத்து போன நிலையில் கட்சி அரசியலில் இயங்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் கண்டடையவில்லை. திமுகவிற்காக பேச வேண்டும். திமுக வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். திமுககாரனாகவே இயங்க விரும்புகிறேன்.
ஜெயலலிதா பற்றியும் இலங்கை பற்றியும் நாஞ்சில் சம்பத் கருத்து
நான் சார்ந்த கொள்கைக்கு ஜெ. ஒருவகையில் நிறைவு செய்திருக்கிறார். தமிழ் ஈழத்திற்கு தீர்மானம் கொண்டு வந்ததும், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலைக்கு தீர்மானம் கொண்டு வந்ததும், ராஜபக்ஷே கொலை குற்றவாளி, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். சங்கராச்சாரியை கைது செய்தது போன்ற துணிச்சல் மிக்க செயல்களை செய்தவர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி?
தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. ஜெ.வின் மறைவுக்கு பிறகு தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறியது. முதல்வர் வாய்ப்பு அவரை தேடி வந்தது. சசிக்கலாவால் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் தற்போது செல்வாக்கால், முதல்வரானார் என்று நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்.
ஜெ.வின் மீது இப்போதும் அதே மரியாதை இருக்கிறதா?
ஜெயலலிதா மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். ஆளுமை உள்ள தலைவராக இருந்தவர். பலருக்கும் இன்றும் வழிகாட்டியாக இருக்கிறார். தமிழின உரிமையை வென்றெடுக்க சமரசம் இல்லாமல் போராடியவர் ஜெயலலிதா.
உங்கள் பார்வையில் கொரோனாவும் எடப்பாடியும்!
என்னுடைய பார்வையில் எடப்பாடி அரசியல் பிழை. கொரோனா காலப் பிழை.
மதிமுக உங்களை அடையாளப்படுத்தவில்லையா?
மதிமுகவில் நான் அடையாளப்படுத்தப்படவில்லை. 1986ம் ஆண்டு, ஆதிக்க இந்தியை எதிர்த்து கோவை, சிதம்பரம் மாநாட்டில் ஸ்டாலின், வீரபாண்டியார் வரிசையில் படத்திறப்பு விழாவில் பாவேந்தன் படத்தை திறந்து வைத்து, டாக்டர் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்டேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் வான்புகழ் வள்ளுவன் காட்டும் பண்பாடு என்ற தலைப்பில் பேசினேன். அதற்கு பிறகு கோவை மாநாட்டில், பத்திரிக்கை சுதந்திரம் பாடும்பாடு குறித்து பேசினேன். 1989-ல், ஆகஸ்ட் 17ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. எனவே மதிமுக எனக்கு அடையாளத்தை தரவில்லை. மதிமுகவிற்கு நான் ஏதேனும் செய்தேனே என்பதை அக்கட்சி தொண்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
முக ஸ்டாலின் உங்களுக்கு தலைவனா அல்லது அவருக்கு நீங்கள் வழிகாட்டியா?
நான் யாருக்கும் வழிகாட்டியாக இருக்கும் தகுதி எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். அவரை நான் தலைவனாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்.
மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றது மதிமுகவில் இருந்த போதுதானே?
நான் மக்களிடம் செல்வாக்கு பெற்றது கட்சியை வைத்து இல்லை.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா?
வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். யாரிடத்திலும் வாய்ப்பிற்காக நான் போய் நிற்கமாட்டேன்.
தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால்?
அடுத்த பிரதமர் அவர் என்று சொல்லப்படும் இடத்தை அடைந்திருப்பார்.
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி தான் வீடு கட்டினேன்!
அன்றைய சூழலில் வைகோ நினைத்திருந்தால் எனக்கு வீடு கட்டி தந்திருக்கலாம். ரசீது அடித்துக் கொண்டு தொண்டர்களிடம் 100, 200 பெறுவதில் விருப்பம் இல்லை. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி தான் வீடு கட்டினேன். கடனை முடிக்கும் தருவாயில் நான் அந்த கட்சியில் இல்லை.
பிரபாகரன் குறித்து?
பிரபாகரன் ஒரு போராளி. ஒரு லட்சியத்திற்காக தன் உயிரை தியாகம் செய்தவர். உலக வரலாற்றில் அவருக்கு நிகரான போராளி, ஒரு வீரன் இன்னும் பிறக்கவில்லை.
சீமானுடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்றுவீர்களா?
சீமான் ஒரு அரசியல் போலி. அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது. ஏன் என்றால் அவரிடத்தில் ஜனநாயக பண்பு என எதுவும் இல்லை.
தொல். திருமாவளன் பற்றி
எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இனம் காக்கும். மொழி காக்கும். அவருடைய திட்டங்கள் அற்புதமானவை. தன் பிறந்த நாளுக்கு ஒரு லட்சம் பனைமரங்கள் நடச்சொல்லி, நடப்பட்ட பனைகள் மீது கவனம் செலுத்துகிறார். அவர் ஒரு உன்னதமான தலைவர். நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் அற்புதமான தலைவர். அவர் வெல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்ல கொடையாளன் ராகவா லாரன்ஸ்
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்ல கொடை மனம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இல்லாதவர்களுக்கு உதவும் அவரின் கொடை உள்ளம் என்னை கவர்ந்தது.
வைகோ பற்றி ஒரு வரியில்!
அச்சம் நீங்கிய தமிழ் இனத்தின் ஆணிவேர்
கமல் ஹாசன்
நிரந்தர இளைஞன். நல்ல கலைஞன். தமிழ் சினிமாவிற்கு உலக தகுதி கிடைக்குமானால் அது கமலால் மட்டுமே முடியும். மக்கள் நீதி மய்யம் இப்போது தான் சரியான தளத்திற்கு வந்துள்ளது. அவரின் சமீபத்திய தமிழ் இந்து கட்டுரை சிறப்பாக இருந்தது. கால அவகாசம் தராத மோடிக்கு கண்டனங்கள் தெரிவித்த தைரியத்தை வரவேற்கின்றேன். இதே வழியில் அவர் பயணித்தால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.