பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் மின் வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 13ம் தேதி காலை ஒரு மணி நேரத்திற்குள் மட்டும் 3 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், எக்ஸ்ரே எடுக்க காலதாமதம் ஆனது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் மற்றும் உறவினர்கள் செல்போன் லைட் வெளிச்சத்துடன் எக்ஸ்ரே அறை முன்பு குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து சிலரை எக்ஸ்ரே எடுக்க மறுநாள் வருமாறு திரும்ப அனுப்பினர். இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல், உள்நோயாளிகளின் அனுமதி சீட்டு வழங்கும் இடத்திலும் மின்சாரம் இல்லாமல் கைகளில் எழுதி பதிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டு பொதுமக்களின் கூட்டமும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், அவர்களது உறவினர்கள் தகவல் வாயிலாகவும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பான செய்தியை கடந்த 14ம் தேதி நமது இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் தமிழ் (ஐ.இ தமிழ்) இணைய பக்கத்தில் வெளியிட்டு இருந்தோம். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிரமத்துடன் காத்திருந்த வீடியோவை நமது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தோம். அந்தப் பதிவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்தும் இருந்தோம்.
எக்ஸ்ரே எடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்!#coimbatore | @V_Senthilbalaji | @Subramanian_ma pic.twitter.com/eVLPChcdeB
— Indian Express Tamil (@IeTamil) April 14, 2023
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின் வெட்டு சரிய செய்யப்பட்டது என்றும், உயர் அழுத்த கேபிள்களால் தான் இந்த மின் வெட்டு ஏற்பட்டது என்றும் மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், கோவை அரசு மருத்துவமனையில் மின்சார வாரியத்தின் மின் விநியோகம் எப்போதும் போலவே இருந்தது. 12ம் தேதி அன்று 7.59 மணி அளவில் வளாகத்தில் உள்ள டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்ஃபார்மருக்கு (DT) நீட்டிக்கப்பட்ட கேபிளில் ஏற்பட்ட கோளாறு (HT) காரணமாக மின் விநியோகத் தடை ஏற்பட்டது. நுகர்வோர் தரப்பில் உள்ள தவறு இடம் கண்டறியப்பட்டு, பொதுப்பணித்துறையினர் மின்விநியோகத்தை மீட்டனர்.
15.04.23 அன்று 8.30 மணி அளவில் விநியோகம் சீரானது. இடைப்பட்ட காலத்தில் ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மின்சார வாரியத்தின் தரப்பில் மின்விநியோகம் செய்வதில் எந்த தடை இல்லை.” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil