சபாநாயகர் அரசியல் சாசன கடமையை செய்ய தவறினால், நீதி மன்றம் செய்ய வேண்டும்! கபில் சிபில் வாதம்

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சொல்வது மோசடி.

சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும்
திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவை மீறி வாக்களித்த பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார்.

’’சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், நீதிமன்றம் தன் அரசியல் சாசன கடமையை செய்ய வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என இந்த நீதிமன்றத்தில் கூறி விட்டு தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதற்கு சமம் பன்னிர்செல்வம் உள்ளிட்டோர் தகுதி நீக்கப்பட்டால் அவர்கள் அமைச்சர்களாக ஒரு நொடி நீடிப்பது சட்டவிரோதமானது.

தினகரன் ஆதரவு எம்.எல் ஏ க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக புகார் அளித்த நாளிலேயே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதை எப்படி சபாநாயகர் நியாயப்படுத்துகறார். சபாநாயகர் சட்டப்பேரவை தலைவராக செயல்படாமல் கட்சி சார்ந்து தான் செயல்பட்டிருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.’’ இவ்வாறு கபில் சிபில் வாதிட்டார்.

வெற்றிவேல் உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார்.

’’கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும். கொறடா உத்தரவு என்பது அனைத்து எம் எல் ஏ க்களுக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தகுதி நீக்கம் கோரிய புகார் குறித்து முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் பன்னிர் செல்வம் அணியினர் தெரிவித்ததை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்.’’ என பி.எஸ்.ராமன் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதம் முடிவடைந்ததாக அறிவித்தனர், நீதிபதிகள்.

எழுத்துபூர்வ வாதங்களை மார்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்ய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டு வழ்க்கை ஒத்திவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close