"ஆயிரம் தினகரன் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது", என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி நற்பெயரோடு இருக்கிறது. ஒரு சிலர் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சியின் மீது குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்த ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் 18 எம்.எல்.ஏ-க்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அவர் கட்சி ஆரம்பித்த பிறகு, ரஜினியைப் பற்றி கேள்வி கேளுங்கள். அப்போது தக்க பதில் சொல்கிறோம். பி.ஜே.பி கூட்டணி வேண்டும், வேண்டாம் என்று சொல்லியதுபோல் எனக்கு தெரியவில்லை. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும். கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றவர், ஒன்றல்ல இதுபோல ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது”, என்றார்.
தங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவிடாமல் அமைச்சர் எம்.சி சம்பத்தும் மணிகண்டனும் தடுக்கிறார்கள் என்று பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யாவும் திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸும் கூறிய புகார் தொடர்பான கேள்விக்கும் ஊட்டியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டில் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துபோன தொழிலாளியைப் பற்றிய கேள்விக்கும் ”அதுதொடர்பான தகவல்கள் இன்னும் என் கவனத்துக்கு வரவில்லை” என்று பதிலளித்தார்.