டிராபிக் போலீஸில் சிக்கினால் க்ரிடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தலாம்

சென்னை மாநகர போலீஸார் இன்று முதல் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாறியிருப்பதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொண்டு பணம் இல்லாமல் அவதி பட்ட அனுபவம் உள்ளவரா நீங்கள். நிச்சயம் இந்த செய்தி உங்களுக்காகத்தான்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போலீசார் பிடித்து அந்த இடத்திலேயே ஃபைன் போடுவார்கள். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க உத்தரவுக்குப் பின்னர், எல்லாமே ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறி வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையும் பணமில்லா பரிவர்தனைக்கு மாறுகிறது.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, வங்கிக் கடன் அட்டை அல்லது பற்று அட்டைகள் (க்ரிடிட் அல்லது டெபிட் கார்டுகள்) மூலம் செலுத்தலாம். அதற்கு வசதியாக இன்று முதல் 100 பிஓஎ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிஓஎஸ் இயந்திரங்கள் மூலமாக அபராத தொகையை க்ரிடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம். வங்கி அட்டை இல்லாத போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் அபராத தொகையை தற்போது நடைமுறையில் உள்ளவாறு ரொக்கமாகவும் செலுத்தலாம். போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்த உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து அபராத முறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை நோக்கிய நடவடிக்கையாகும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

×Close
×Close