நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணப் பதிவுகள் புகார் மீதான விசாரணையை நிறுத்த மாவட்டப் பதிவாளர்களுக்கு மாநில பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு, நில அபகரிப்பு மோசடி ஆகியவற்றை தடுக்கும் நோக்கத்தில், கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு பதிவுச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்தது. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட் 16 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மோசடி போலி பத்திரப்பதிவு புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரப் பதிவை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம், தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு மற்றும் போலி பத்திரப் பதிவு தொடர்பான புகார்கள் வந்தால் அவற்றை ஆராய்ந்து அதன் மீது விசாரணை நடத்தி, அந்தப் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட சார் பதிவாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு தொடர்பாக பதிவுத் துறை அலுவலகத்துக்கு ஆயிரக் கணக்கான புகார்கள் வந்த வண்னம் உள்ளன. இதையடுத்து, போலி பத்திரப் பதிவு தொடர்பான புகார்கள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விசாரணைகளை நிறுத்தி வைக்க வேன்டும் என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள சுற்றறிகையில் கூறியிருப்பதாவது: “மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்காக, பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 77A என்ற பிரிவை, முன் தேதியிட்டு அமல்படுத்தலாமா என்பது உள்ளிட்ட சில கேள்விகள், உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக, அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மோசடி பத்திரப் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மோசடி பத்திரங்கள் ரத்து தொடர்பான புகார்கள் மீதான விசாரணை உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, இந்த மனுக்களை விசாரிக்க வேண்டாம். 2022 ஆகஸ்ட் 16-க்கு முன் மற்றும் பின் பதிவான அனைத்து பத்திரங்களுக்கும் இது பொருந்தும்” என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“