தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையிக் 132 சிலைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்ற இந்த சோதனையில் 5 ஐம்பொன் சிலைகள், 12 உலோகச் சிலைகள், 22 கல்தூண்கள் என மொத்தம் 89 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து சிலைகளும் தொன்மை வாய்ந்த நூற்றாண்டு சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் கும்பகோணம் எடுத்துச்செல்லப்பட்டது. வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் இருந்ததாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் நேற்றைய தினம் (2.10.18) தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டிலும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈட்டுப்பட்டனர்.
செங்கல்பட்டு அருகே, மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள மொகல்வாடி கிராமத்தில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, லிங்கம், நரசிம்மர், முருகன், நந்தி, தட்சிணாமூர்த்தி, சிவன் உள்ளிட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. இங்கு மொத்தம் 132 சிலைகள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு பத்திரமாக எடுத்து செல்லப்படும் என்றும், இந்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அறநிலைத்துறை அதிகாரிகள்:
இந்த அதிரடி சோதனைக்கு பின்பு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர்,” அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்யாமல் இருந்தால் பயப்பட தேவையில்லை. போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது தான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
9 அதிகாரிகளை நாங்கள் கைது செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. ஒரு அதிகாரிக்கு ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி தான் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ மிகவும் பழமையான சிலைகளை உரிய அனுமதி இல்லாமல் வீடுகளில் பதுக்கி வைப்பது சட்டப்படி குற்றமாகும். போலீசாரால் வீடுகளில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயமாக தண்டனை கிடைக்கும். சிலைகளை வீடுகளில் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் கொடுத்தால் பாராட்டு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.