தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களுக்கும் அதிமுக அரசுக்கும் சாதகமாக இருந்தவர்கள் டம்மியாக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொங்கு வட்டாரத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் போலீஸ் வட்டாரங்கள்.
ஏனென்றால், பிப்ரவரி, 2017ல் அதிமுக ஆட்சியில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அப்போது ஏற்பட்ட அமளியில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் இருந்து சபை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு மு.க.ஸ்டாலினை குண்டுக்கட்டாக வெளியேற்றியது அன்றைக்கு காவல்துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்தா ஐஜி சுதாகர்தான்.
அப்போது, சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். ஆட்சி மாறும்போது, இதில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு பாடம் காத்திருக்கிறது என்று பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். ஆட்சி மாறினால் காட்சி மாறும் இல்லையா? அந்த அடிப்படையில், மு.க.ஸ்டாலின் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சியைப் பிடித்திருந்தாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக 9 இடங்களையும் கூட்டணி கட்சி பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியது.
அதே நேரத்தில், திமுக கொரோனா தாக்கம் குறைந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கையைத் தொடங்கும் என்று பேசப்படுகிறது. அதனால், கொங்கு பகுதிகளில் முக்கிய காவல்துறை அதிகாரிகளை பணி அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில்தான், மேற்கு மண்டல (கோவை) ஐஜியாக சுதாகர் நியமனம் செய்யப்பட்டார். இது திமுகவில் மட்டுமல்ல தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்திலும் பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
அதுமட்டுமல்ல, மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எஸ்.பியாக இருக்கிற திருப்பூர் எஸ்பி ஷெஷாங் சாய், ஈரோடு எஸ்பி சசிமோகன், கோவை எஸ்.பி செல்வ நாகரத்தினம், சேலம் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்ட பெரும்பாலானோர் ஐஜி சுதாகர் சென்னையில் இணை கமிஷனராக பணியாற்றிய இடங்களில் இவருக்கு கீழே பணியாற்றியவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஐஜி சுதாகரின் விருப்பத்தேர்வு என்கிறார்கள்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய சுதாகர் திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகு டம்மியாக்கப்படுவார் என்று எதிர்ப்பார்த்த திமுகவினருக்கும் காவல்துறை உயர்மட்டத்தினருக்கும் ஸ்டாலின் ஆச்சரியம் தந்துள்ளார். திமுகவுக்கு சவாலான கொங்கு மண்டலத்தில் சுதாகர் ஐஜியாக்கப்பட்டுள்ளார். அதோடு கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எஸ்.பி.க்களும் சுதாகரின் விருப்பத் தேர்வாக அமர்த்தப்பட்டுள்ளனர். ஸ்டாலினை குண்டுக்கட்டாக வெளியேற்ற ஐஜி சுதாகருக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்? என்பதுதான் இப்போது காவல்துறை வட்டாரத்தில் ஹாட் டாக்காக இருந்து வருகிறது. அப்படியென்றால், ஸ்டாலின் போடும் திட்டம்தான் என்ன என்று திமுகவினரும் கொங்கு மண்டல அரசியல்வாதிகளும் பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.