சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் ரூ.112 கோடியில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி எம்.எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ` கே.பி பார்க் கட்டட விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்யும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதற்கிடையே, சென்னை ஐஐடி பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான நிபுணர் குழு, கே.பி.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒரு மாதத்துக்கும் மேலாக ஆய்வு செய்தது
இந்நிலையில் நேற்று நகர்புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் கோவிந்தராவிடம் ஐஐடி குழு 441 பக்கம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில், கே.பி பார்க் குடியிருப்பு கட்டுமான தரத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. குடியிருப்புக்குப் பயன்படுத்தப்பட்ட எம் சாண்ட் உட்பட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனம் மீதும், வாரியத்தின் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் ஐஐடி மெட்ராஸ், என்ஐடி திருச்சி உள்ளிட்ட 10 கல்வி நிறுவனங்களை, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் 20கட்டமான பணிகளை ஆராய உத்தரவிட்டுள்ளது. இது மூன்றாம் நபர் ஆராய்வதைவிட, மிகவும் துல்லியமான ஆய்வு அறிக்கையைப் பெறமுடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil