மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதற்கும், ஐ.ஐ.டி-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்கு மாணவி சென்றிருந்தபோது அத்துமீறல் என்றும் ஐ.ஐ.டி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (ஜனவரி -14) மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை.
சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐ.ஐ.டி வழங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.