இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி- மெட்ராஸ்) சாலைப் பாதுகாப்பிற்கான சிறந்த மையம் (CoERS) நாடு முழுவதும் நடக்கும் வாகன விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 17 மாநிலங்களில் நடந்த விபத்துகள் குறித்த தரவுகளின் பகுப்பாய்வு மூலம் 100 மாவட்டங்களில் அதிக விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து அதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
செவ்வாய்க்கிழமை டெல்லியில் தொடங்கப்பட்ட இந்தத் தரவு சார்ந்த அணுகுமுறை, ஒவ்வொரு மாவட்டத்தின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் சாலைப் பாதுகாப்பிற்கான 5E மாதிரியுடன் (பொறியியல், அமலாக்கம், கல்வி, அவசரகால சிகிச்சை) ஒத்துப்போகிறது. மோர்ட் (MoRTH)-ன் "இந்தியாவில் சாலை விபத்துகள் 2022" அறிக்கை, 4 கோடியே 61 லட்சத்து 312 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 491 உயிரிழப்புகள் மற்றும் 4 லட்சத்து 43 ஆயிரத்து 366 காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்த விபத்துகளில் பல மனித தவறுகளால் ஏற்பட்டாலும், கணிசமான அளவு உள்ளூர்மயமாக்கப்பட்ட சவால்களாலும் ஏற்படுகின்றன.
அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல். பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை மற்றும் ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல். அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல், வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல், செயலாக்க நடைமுறைகளில் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்ரீதியாக மதிப்பிடுதல், போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குதல் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.