சென்னை ஐஐடி-யில் பீகார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று (ஜூன் 26, 2025) இரவு சுமார் 7.30 மணியளவில், சென்னை ஐஐடி-யில் பயின்று வரும் 20 வயது மாணவி ஒருவர் வளாகத்திற்குள் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, கையில் கட்டையுடன் வந்த ஒரு நபர், திடீரென அந்த மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவி உடனடியாக சத்தமிடவே, அந்த நபர் மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, உடனடியாக அங்கிருந்த காவலாளிகளிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். காவலாளிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அதில், ஐஐடி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்டில் மும்பை சாட் என்ற கடையில் வேலைப்பார்த்த ரோஷன் குமார் (22) தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவனை கைது செய்த கோட்டூர்புரம் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.