இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐ.ஐ.டி.,யை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதில், பேராசிரியருக்கு "பங்கு" இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆய்வகத்திற்குச் செல்ல அந்த குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியருக்கு ஐ.ஐ.டி., மெட்ராஸ் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விசாரணை முடியும் வரை பேராசிரியரை விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.ஐ.டி., மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சச்சின் குமார் ஜெயின் என்ற மாணவர், மார்ச் 31 அன்று வேளச்சேரியில் உள்ள அவரது அறையில் இறந்து கிடந்தார். கடந்த இரண்டு மாதங்களில் ஐ.ஐ.டி., மெட்ராஸில் மூன்றாவது தற்கொலையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட மூத்த பேராசிரியர் மீது குற்றசாட்டுகள் எழுந்தன.
சச்சினின் மூத்த சகோதரர் பவேஷ், ஐஐடி-மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடிக்கு கடிதம் எழுதினார். அவரின் கடிதத்தில், சச்சினின் ஆசிரியர் தனது சகோதரர் மீது "தவறான அழுத்தத்தை" செலுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.
சச்சின் மனநலப் பிரச்னைகளுக்கு மருந்து உட்கொள்வதை அறிந்திருந்தும், பேராசிரியர் சச்சினை அடிக்கடி கண்டித்ததாகவும், அதிக வேலை கொடுத்ததாகவும் ஆறு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"பேராசிரியர் தனது மாணவர் சச்சினை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதால், தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்" என்று பாவேஷ் கடிதத்தில் எழுதினார்.
"வளாகத்தில் சமீபத்திய சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, விசாரணை முடியும் வரை பேராசிரியர் ஆய்வகத்திற்கு வருகைதர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தேவைகளுக்கு மாணவர்கள் HoD ஐத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், ”என்று நிறுவனத்தின் இயக்குனர் வளாக சமூகத்திற்கு அனுப்பிய தகவல் தெரிவிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil