சென்னை ஐஐடி மெட்ராஸில் பிஹெச்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கொல்கத்தாவில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கிங்ஷூக்கை சென்னையை சேர்ந்த தனிப்படை காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட கிங்ஷூக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.
30 வயதாகும் கிங்ஷூக் தேப்சர்மா, ஞாயிற்றுக்கிழமை டைமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க கிங்ஷூக்கை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ட்ரான்சிட் வாரண்ட் பெறுவதற்காக காவல் துறையினர் திங்கள்கிழமை அந்நபரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இந்த வழக்கை எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் 8 பேர் மீது கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 பேரில் கிங்ஷூக்கும் ஒருவர் ஆவர். மற்றவர்கள், சுபதிப் பானர்ஜி, மலாய் கிருஷ்ணா மஹதோ, ரவீந்திரன், எடமான் பிரசாத், நாராயண் பத்ரா, சௌரவ் தத்தா மற்றும் அயன் பட்டாச்சார்யா ஆகும்.
கொல்கத்தாவில் உள்ள காவல் துறையினர் இரண்டு பேராசிரியர்கள், ஐந்து ஐஐடி மெட்ராஸ் ஸ்கோலர்களை விசாரணைக்காக காவலில் வைத்திருக்கும் போது, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கில் கிங்ஷுக் 2021 டிசம்பரில் முன்ஜாமீன் பெற்றார். இதுகுறித்து பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர், கிங்ஷூக் ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்காததால், அவரது ஜாமீன் தானாகவே ரத்து செய்யப்பட்டது என்றார்.
மாணவி அளித்த புகாரின்படி, 2016 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் இணைந்தது முதலே, கிங்ஷூக்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுதாகவும் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு கூர்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற போது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிறுவன வளாகத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் தன்னை படமெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil