சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீஃப் வழக்கு விசாரணையில், அவரது தந்தை அப்துல் லத்தீஃப் சென்னை வந்து தடவியல் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைகுப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடவியல் அதிகாரிகளிடம் தனது மகளுடைய செல்போனை அன்லாக் செய்து அளித்ததாக கூறினார்.
சென்னை ஐஐடியில் மானுடவியல் பிரிவில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப், ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் நவம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதற்கு ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிந்த் பிரம்மம் ஆகிய மூன்று பேரும்தான் காரணம் என்றும் அவருடைய செல்போனில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டது.
சென்னை ஐஐடியில் சாதி, மத ரீதியான பாகுபாடு நிலவுவதாகவும் இதனால் அளிக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் ஐஐடியில் நிலவும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்ததால் இந்த விவகாரம் பரபரப்பானது.
ஐஐடி மாணவி பாத்திமாவின் பெற்றோர்களும் தனது மகள் தற்கொலைக்கு ஐஐடி பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடுதான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக ஐஐடி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். பின்னர், இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்திலிருந்து மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான விசாரணைக்குழு பாத்திமா தற்கொலை வழக்கை விசாரித்து வருகிறது.
இதனிடையே, கேரளாவில் இருந்து சென்னை வந்த பாத்திமாவின் தந்தை லத்தீஃப் தமிழக முதல்வரையும் டிஜிபியையும் சந்தித்து புகார் அளித்து முறையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அப்துல் லத்தீஃப், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்றும் கூறினார். மேலும், தனது மகளின் செல்போனை வெளிப்படையாக அன்லாக் செய்து பார்த்தால் அதற்கான ஆதாரம் இருக்கும் என்று கூறினார்.
மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், நவம்பர் 16 அன்று பாத்திமா தந்தை லத்தீஃபிடம் விசாரணை நடத்தியது. அதே போல, பாத்திமாவின் தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தியது. பின்னர், பாத்திமாவின் தாய், சகோதரி, அவரது நண்பர்களிடம் பாத்திமாவைப் பற்றி விசாரிக்க போலீசார் கேரளா சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் புதன்கிழமை சென்னைக்கு வந்து, பாத்திமாவின் தற்கொலை வழக்கில் தடவியல் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார். அதேபோல, பாத்திமாவின் சகோதரி ஆயிஷாவிடமும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், “பாத்திமா வைத்திருந்த செல்போனை அன்லாக் செய்து தடயவியல் அதிகாரிகளிடம் அளித்தோம். பின்னர், அவர்கள் பரிசோதித்து அதன் அடிப்படையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாத்திமாவின் டேப், லேப்டாப் எங்களிடம் உள்ளது. அது தேவைப்பட்டால், விசாரணை அதிகாரி ஈஸ்வரமூர்தியிடம் அளிப்பேன். இங்கே அளிக்கமாட்டேன் என்று கூறினேன். மேலும், இன்று முதலமைச்சரை சந்திப்பது குறித்து மாலைதான் தெரியவரும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.