சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீஃப் என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி ஐஐடியில் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, அவருடைய செல்போனில் தனது தற்கொலைக்கு காரணம் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமசந்திர காரா, மெலின்ஸ் பிராமே ஆகியோர் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் அணி, திமுக மாணவர் அணி உள்ளிட்ட அமைப்புகள், ஐஐடியில் சாதி மத ரீதியான பாகுபாடுகள் காரணமாக மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஐஐடி வளாகம் உள்ள கிண்டி சாலை போராட்டக் களமானது.
இதையடுத்து, தமிழக டிஜிபி ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாணவி தற்கொலையில் குற்றம்சாட்டப்படும் 3 பேராசிரியர்களிடமும் ஐஐடி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் கேரளாவில் இருந்து சென்னை வந்து தமிழக முதலமைச்சரையும் டிஜிபியையும் சந்தித்து புகார் அளித்தார். தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, அப்துல் லத்தீஃப் தனது மகள் பாத்திமா தன்னிடம் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மோசமான ஆள் என்று கூறினாள். தனது மகளின் தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்தமநாபனே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, அவர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து முறையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கியுள்ள பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃபிடம், மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரி மெகலீனா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் லத்தீஃப், விசாரணையில் அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டதாக கூறினார். மேலும், பாத்திமா பயன்படுத்திய கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் போலீசார் கேட்டிருப்பதாக கூறினார்.
பாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புள்ள 28 நாட்களுக்கான டைரி குறிப்புகளும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், விசாரணை முடியும் வரை சென்னையில் தங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாத்திமா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தனது செல்போனில் தெரிவித்திருந்த தகவலின்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமசந்திர காரா, மெலின்ஸ் பிராமே ஆகிய 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கேட்டு ஐஐடி மாணவர்கள் 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வில், திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் பேசுகையில், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக இதுவரை யாருடைய பெயரும் ஏன் இடம் பெறவில்லை? விசாரணைக்காக ஏன் ஒரு பேராசிரியர் கூட இதுவரை அழைக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர் கல்வித்துறை செயலாளரை அனுப்பி இருக்கிறோம். சென்னை ஐ.ஜி.-யும் ஏற்கெனவே விசாரணையை தொடங்கி இருக்கிறார். அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.