சென்னை கே.பி. பார்க் கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாக ஐஐடி ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த குடியிருப்பில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், தரமில்லாமல் இருப்பது குறித்த செய்தி வெளியானதையடுத்து, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சென்னை ஐஐடியில் இருந்து நிபுணர் குழு கே.பி.பார்க் குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்பிப்பார்கள் என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய CUBE (Centre for Urbanisation, Building and Environment) என்ற நிறுவனத்திலிருந்து 10 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கே பி பார்க் குடியிருப்பின் கட்டிட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தொடங்கினர். செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வுட மேம்பாட்டு வாரியத்திடம் முதற்கட்ட 441 பக்க ஆய்வறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்து.
தற்போது, ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வுகளை அறிக்கையாக சென்னை ஐஐடி நிபுணர் குழு சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில், சென்னை புளிந்தோப்பு கே.பி. பார்க் கட்டிடத்தின் பூச்சு வேலை மோசமாக உள்ளதாகவும், சிமெண்ட்டின் அளவு தேவையை விட மிக குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மொத்த பூச்சு வேலையும் தரமற்ற கலவையால் செய்யப்பட்டுள்ளது. அதாவது தரமற்ற மணல் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் தரைத்தளம் முறையாக அமைக்கப்படவில்லை. திட்ட வரைப்படத்துக்கு மாறாக கழிப்பறைகள், கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பை கட்டும்போது தரமான பொறியியல் கட்டுமான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. கட்டிடத்தில் உள்ள மின்சார வயரிங் பணிகள் மற்றும் மின் மோட்டார்களும் தரமற்றதாக உள்ளது. தீயணைப்பு வசதி, லிஃப்ட் வசதி, தண்ணீர் விநியோகம், கழிவுநீர் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் மோசமான முறையில் உள்ளது. என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும், சரியான இடைவெளியில் கட்டடத்திற்கு தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் கட்டடத்தை எப்படி பராமரிப்பது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு கற்றுத்தரவும் ஐஐடி அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil