நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், சி.ஏ.ஏ குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இல. கணேசன், “வரலாறு தெரிந்தவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்க மாட்டார்கள். இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். நாடு விடுதலையடையும்போது அல்லது பிரிவினை அடையும் போது எப்படி சொன்னாலும் சரிதான்.
நாடு பிரிவினையான பின்புதான் விடுதலையானது. அந்தச் சமயத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வார்த்தையை சரியாக கவனிக்க வேண்டும்.
அவரகள் அங்கிருந்து வரவில்லை; விரட்டப்பட்டார்கள். அந்த வரலாறு மட்டுமே பேச ஒரு மணி நேரம் ஆகும். கண்ணீர் வரும், ரத்தக் கண்ணீர் வரும். அந்த மக்களுக்கு இன்றுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை.
எனக்கும் உங்களுக்கும் இருக்கும உரிமை அவனுக்கு கிடையாது. இது ஒருபக்கம், இன்னொரு பக்கம் திட்டமிட்ட எண்ணத்தோடு இந்த நாட்டுக்குள் ஊடுறுவி வந்தவர்கள் லட்சம் பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். கிழக்கு வங்காளத்தில் இப்படி ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டுரிமை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு என குடியுரிமை கிடைக்கிறது.
இப்போது அடித்து விரட்டப்பட்டவனுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள் பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்டு வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், தற்போது குடியுரிமை பெற்றுள்ள நபர்களில் ஒருவரின் குடியுரிமையும் ரத்து செய்யப்படாது. ஆனால் அகதிகளாக விரட்டப்பட்ட மேலே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குடியுரிமை கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது” என்றார்.
இலங்கை தமிழர்கள் குடியுரிமை தொடர்பான கேள்விக்கு, “அந்த அகதி பிரச்னைக்கு குடியுரிமை கேட்டு யாரும் குரல் கொடுக்கவில்லை. என் கருத்து என்னவென்றால் இலங்கை குடிமக்கள் சொந்த சகோதரர்கள். அவர்கள் எப்போது வேண்டும் என்றாலும் இங்கு வரலாம்.
மேலும் இலங்கையில் தேர்தல் முறையில்தான் எல்லாமும் நடக்கிறது. ஆகவே இதிலும் சிந்திக்க வேண்டும்” என்றார்.
இந்தியாவில் சி.ஏ.ஏ. சில வாரங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“