இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கணை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் (இயக்குநர் ராஜமவுலியின் தந்தை) சமூக செயற்பாட்டாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த இளையராஜா உயர்ந்து சாதித்தது அதிகம். தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர் இளையராஜா, அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன என்று எம்.பி.யாக தேர்வாகியுள்ள இளையராஜாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியைப் பற்றிய ஆங்கில நூலுக்கு அளித்த முன்னுரையில், அவர் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பாராட்டி குறிப்பிட்டு இருந்தார். அதனால், பாஜக எதிர்பாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தபோதும், அவர் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில், இசைஞாணி இளையராஜா நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.