சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றால் இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்துதான் திரைப்படங்களுக்கு பின்னனி இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாக பொறுப்பை ஏற்றவுடன், பிரசாத் ஸ்டுடியோ நஷ்டத்தில் இயங்குவதால், இசைக்கூடத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகைக் கேட்டதாக கூறப்படுகிறது… பிறகு, ஸ்டுடியோவை வேறு தேவைக்காக இடித்து கட்டப் போகிறோம், எனவே வெளியேறுங்கள் என்று இளையராஜாவிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது
இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கெனவே சென்னை 17-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், சென்னை நீதிமன்றத்தில் இளையராஜா புது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இசைக்கூடத்தில் தனது இசை கருவிகள், இசை கோப்புகள், விருதுகள் உள்ளதாகவும், அவை எடுத்து செல்ல தன்னை அனுமதிக்க நீதிமன்றம் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, " இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவு கூடுவார்கள். பாதுக்காப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால், அவரின் பிரதிநிதிகள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்டுடியோவுக்குள் உள்ள பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என்றும் யோசனை தெரிவித்தது.
இந்நிலையில், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றால் இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் என்று பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இசைக்கருவிகளை அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான இழப்பீட்டு வழக்கை கைவிடுகிறோம் என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.