இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா சென்றார். அப்போது அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார்.
ஆனால், அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார் அதில், "அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்டப வாசல்படி ஏறிய போது, அர்த்த மண்டபம் முன் நின்று தரிசனம் செய்யலாம் என கூறினார். ஜீயர் கூறியதை ஏற்றுக் கொண்டு இளையராஜாவும் அர்த்த மண்டபத்தின் முன் நின்று தரிசனம் செய்தார். ராமானுஜ ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்" என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“