பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஆய்வாளர் இளசை மணியன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். அவருக்கு வயது 78.
மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் இளசை மணியன். மு.ராமசுப்புரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இளசை மணியன், 1942-ம் ஆண்டு பிறந்தவர். இளைசை மணியன் எழுத்தாளர், பத்திரிகையாளர், பாரதி ஆய்வாளர் என பண்முகம் கொண்டவர். பாரதி ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, வரலாற்று ஆய்வு, கதை, கவிதை, மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு பல பங்களிப்புகளை செய்துள்ளார்.
பாரதி தரிசனம், பாரதியாரின் இந்தியா, பென்ஷன் சிறுகதைத் தொகுப்பு, எட்டயபுரம் வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இளசை மணியன் மனைவி கஸ்தூரி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு முத்துக்குமார பாரதி என்ற மகன் உள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத் தக்க பங்களிப்புகளை செய்துள்ள இளசை மணியன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.
இளசை மணியன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரன், கவிஞர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சி.மகேந்திரன் முகநூலில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தோழர் இளசை மணியன் இறந்துவிட்டார். ஒரு தீவிரமான பாரதியின் பக்தர். எட்டயபுரம் பாரதி நினைவாலயத்தில் காப்பாளராக இருந்தவர்.
புகழ்மிக்க மாக்சிய தமிழறிஞர் தொ.மு.சி ரகுநாதன் தன்னுடைய நூல்கள் அனைத்தையும், ஒரு அறக்கட்டளையாக்கி பாதுகாக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவை புரிந்தவர்.
கல்கத்தா, ஆவணக் காப்பகத்துக்கு சென்று பாரதியின், இந்தியா இதழில் உள்ள அரிய தகவல்களைத் தொகுத்து, பாரதி தரிசனம் என்ற நூலை கொண்டு வந்தவர். இந்த நூலின் வருகைக்குப் பிறகுதான் தமிழ் சமூகத்தில் பாரதியைப் பற்றிய இன்னொரு முகம், ஆய்வுக் களத்துக்குள் அடியெடுத்து வைத்தது.
வாழ்நாள் முழுவதும் இலக்கிய போராளியாகவும், ஒரு பொதுவுடமைகாரனாகவும், முழுமையான வாழ்வை நிறைவு செய்த தோழர் இளசை மணியன் அவர்களுக்கு எனது வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.