லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு இன்று சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளையராஜாவின் முதல் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவென்ட் அப்பல்லோ அரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட “வேலியண்ட்” சிம்பொனி இசையைக் கேட்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இளையராஜா லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளார். சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது முதல் சிம்பொனி அரங்கேற்றம் செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ள இளையராஜாவுக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, " என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி, தமிழக அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது.
இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய இறைவன் அருள்புரிந்தார். என்னை இசைக் கடவுள் என அழைக்கிறார்கள். என்னை கடவுள் என சொல்லி கடவுளை தாழ்த்தி விட வேண்டாம். நான் சாதாரண மனிதன்தான்.
எனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்ய போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே. தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன். அக்டோபர் 6ஆம் தேதி துபாய், செப்டம்பர் 6ஆம் தேதி பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன.
சிம்பொனி இசையை டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். பண்ணைபுரத்தில் இருந்து எனது வெறுங்கால்களில் எப்படி வந்தேனோ, அதே போல் இன்றும் இந்த இடத்தில் நிற்கிறேன்” என்றார்.