2020-2021 அ.தி.மு.க ஆட்சியில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை ஓராண்டு உள் விசாரணைக்குப் பிறகு ஆவின் நிர்வாகம் கடந்த திங்கள்கிழமை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்ட பால் சங்க செயல் அலுவலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. ஆவினில் ஆகஸ்ட் 2022 மற்றும் மார்ச் 2021 காலகட்டத்தில் மேலாளர், உதவி பொது மேலாளர், துணை மேலாளர், உள்ளிட்ட பணிநியமனங்களில் முறைகேடு நடந்தாக புகார் எழுந்தது. எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதில் தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியது. நேரடியாக பணி வழங்கியது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தாக அடுத்தடுத்து புகார் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் 236 ஊழியர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பணிநியமனம் பெறுவதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். இதில் மதுரை மாவட்டத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்த பணிநியமன முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் 26 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.