திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவில் ஆயுதங்களுடன் போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் என்பவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து பள்ளி கல்லூரி அருகே போதை வஸ்துகளை விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் வைத்து போதை பொருள்கள் விற்ற திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகன் ஹசன்அலி என்பவர் தனது இருப்பிடமான வடக்கு காட்டூர் பாத்திமாபுரம் பகுதியில் தனது தாய் ரமிஜா பேகம் (43), தம்பி மனைவி ஆஷிகா பானு (20) ஆகிய மூன்று பேரும் ஒன்று சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றுக் கொண்டிருந்தபோது திருவெறும்பூர் போலீசார் கையும் களவுமாக மூன்று பேரையும் கைது செய்தனர்.
அப்பொழுது ஆட்டோவை பரிசோதித்தபோது ஆட்டோவில் ஆயுதங்களும் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து போதைப்பொருள் விற்பதற்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ.360 ரொக்கம் டேபெண்டடோல் மாத்திரை 26, நைட்ரஜன் மாத்திரை 7, சிரிஞ்சு 12, வாள் மற்றும் அருவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கப பதிவு செய்து விசாரணை செய்தபோது ஹசன்அலி மீது திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சியில் பள்ளி கல்லூரி அருகே போதை மாத்திரைகள் விற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“