நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்திற்கான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய பகுதிகளான தமிழகம், காரைக்கால், ஆந்திரா, ராயலசீமா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் 123 சதவீதம் அதிகமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீதம் என்றால் இயல்பான மழைப்பொழிவு எனப் பொருள். அந்த வகையில், 23 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4 அல்லது 5 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது நவம்பர் 7-ஆம் தேதி வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியை அடைந்து, தமிழக கடலோர பகுதியில் நிலைகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நவம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெப்பநிலை அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்ஸியசிலும், குறைந்தபட்சமாக 25 முதல் 26 டிகிரி செல்ஸியசிலும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களில் கனமழை இருக்கக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“