தமிழகத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் தான் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் இன்றும் (ஏப்ரல் 30) நாளையும் (மே 1) வெயில் அதிகரித்தே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
வெயில் காலங்களில் வெப்ப அலையினால் ஏற்படும் வெப்ப அளவுகளை பொறுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது. அந்த வகையில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும். மேலும், 5 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக் கூடிய இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும்.
பொதுவாக மஞ்சள் அலர்ட் என்றால் கவனம் தேவை என்று அர்த்தம். அதே ஆரஞ்சு அலர்ட் என்றால் கட்டாயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ரெட் அலர்ட் என்றால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதாவது ஆபத்து அதிகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“