/indian-express-tamil/media/media_files/2025/09/10/whatsapp-image-2025-09-10-10-37-36.jpeg)
Tyagi Immanuel Sekaran Memorial Day
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் சொந்த கார்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். வாடகை வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. வாகனங்களில் வரும் அனைவரும் செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் அனுமதிச் சீட்டு பெற்று, வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
மேலும், வாகனங்களில் ஒலிபெருக்கிகள், ஆயுதங்கள், மத அல்லது சாதி தொடர்பான பதாகைகள், மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து வரும் பேருந்துகள் காலை 10 மணிக்குள் புறப்பட வேண்டும். பேருந்துகளிலும் ஒலிபெருக்கிகள், கட்சிக் கொடிகள் அல்லது பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. கூடுதல் பேருந்துகள் செப்டம்பர் 11 அன்று மட்டும் இயக்கப்படும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அதிகபட்சம் மூன்று சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும். நினைவு இடத்திற்கு நடைபயணமாக வர அனுமதி இல்லை. நகருக்குள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நடைபயணம் அனுமதிக்கப்படும்.
நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் தேதி தவிர மற்ற நாட்களில் எந்த நிகழ்ச்சிகளும், ஒலிபெருக்கி பயன்பாடும் அனுமதிக்கப்படாது. நினைவு இடத்தில் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் மட்டுமே ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும். தலைவர்கள் நினைவிடத்திற்குள் உரையாற்ற அனுமதி இல்லை. அலங்கார ஊர்திகள், மாட்டு வண்டிகள் மற்றும் வேடமிட்டு வருவது போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 4 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நெறிமுறைகள் அனைத்தும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.