ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்.2) தீர்ப்பளித்தது.
காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என யாருக்கு வெற்றி, தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
சென்னையை அடுத்த வானகரத்தில், ஜூலை 11-ஆம் தேதியன்று அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஜுலை 11 தேதியன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, ஓ பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்போது, கட்சியின் சட்டத்திட்டங்களை மாற்றி அமைக்கும் உரிமை கட்சியின் பொதுக்குழுவுக்கே உள்ளது என்றும் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில்,கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற விதம் குறித்தும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் டெல்லி உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. தனி நீதிபதி முடிவெடிப்பார் என்று கூறியது. தொடர்ந்து தனி நீதிபதி வழக்கில் இருந்து விலகினார்.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கொண்ட தனிநீதிபதி அமர்வு, "ஜூலை 11ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தது.
மேலும், ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்கும்" என்றும் தெரிவித்தார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருணைப்பாளர் இருவரும் புதிய பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர். பொதுக்குழு உத்தரவு செல்லும் என்ற உத்தரவால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடருகிறார். இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஒ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil