சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இன்று சுமார் 50 இடங்களில் 3-வது நாளாகவும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இதில், திருவாரூரில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் இல்லம், கல்லூரி என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கலைக்கல்லூரியில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 60 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கல்லூரியில் இருந்து முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை 3 கார்களில் ஏற்றிக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர். கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக கல்லூரியில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘திவாகரனின் வீடு, கல்லூரி உள்பட மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் 8 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கல்லூரியில் முறைகேடுகள் நடந்ததா எனவும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்’’ என தெரிவித்துள்ளனர்.