Advertisment

தண்டோரா போட தடை… மீறினால் நடவடிக்கை... தலைமைச் செயலாளர் கடிதம்; சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thandora ban, impose ban on Thandora, chief secretary letter to district collectors for ban thandora, , welcomes activists, Ban fo Dandora, A Marx, Ravikumar MP, Stalin Rajangam, K Veeramani, TN Govt, தண்டோரா அறிவிப்புக்கு தடை, தண்டோரா போட தடை, ரவிக்குமார், அ மார்க்ஸ், ஸ்டாலின் ராஜாஙம், கீ. வீரமணி, தண்டோராவுக்கு தடை, தமிழக அரசு, chief secretary Iraianbu, tamilnadu govt, thandora banned

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisment

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, அரசு விழிப்புணர்வு திட்டங்கள் போன்ற அரசாங்க அறிவிப்புகள் கூட தண்டோரா போட்டு அறிவிக்கப்படுகிறது. தண்டோரா போடுவது சாதி ரீதியான இழிதொழில், அதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள், தலித் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

அண்மையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பவத்தையொட்டி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, அரசின் நடவடிக்கைகள், காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தெரிவிக்க தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பலரும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டினர். மேலும், தண்டோரா போடுவதைத் தவிர்த்து அறிவிப்பை ஒலிப்பெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான், தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது, மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம், இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தலித் அமைப்புகள், எழுத்தாளர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் 'தண்டோரா' போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன்.

அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் 'தண்டோரா' போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.

எனவே, 'தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

தண்டோரா போடுவதற்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தலைமைச் செயலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இது குறித்து அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குத் தடை : தலைமைச் செயலருக்கு நன்றி! இத்துடன் ஒரு வேண்டுகோள்.

இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வரவேற்கத் தக்கது. கிராமங்களில் இன்னும் நடைமுறையில் உள்ள தண்டோரா போட்டு ஏதேனும் ஒரு செய்தியைப் பரப்பும் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சொல்லி வருவதைக் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பதிலாக வாகனங்களில் ஒலி பெருக்கியை அமைத்து இப்படியான செய்திகளைப் பரப்ப வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். பிணம் எரிப்பது உட்பட இப்படியான பணிகள் அனைத்தையுமே தடை செய்து அவற்றை Mechanise பண்ண வேண்டும்.

இதெல்லாவற்றையும் விட இன்னொரு கொடுமையைத் தலைமைச் செயலாளர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நகரங்களில் குறிப்பாகச் சென்னையில் பாதாள சாக்கடைகள் சுத்தப் படுத்துவதற்கு ஆட்களை மலக் குழிக்குள் உள்ளே இறக்கும் பணி இழிவானது மட்டுமல்ல, ஆரோக்கியக் கேடும், உயிராபத்தும் மிக்க ஒன்றாகும். உள்ளே ஆட்களை இறக்கக் கூடாது என்பதற்கு ஏற்கனவே சட்டங்கள் இருந்தபோதும் அவை கடைபிடிக்கபடாமையால் இந்தச் சாவுகள் நிகழ்கின்றன. தனியார்களால் மட்டுமல்ல, குடிநீர் வாரியம், கார்பொரேஷன் முதலான நிர்வாகங்களிலும் இது நடைபெற்று வருகிறது.

எதையும்விட கவனத்தில் எடுத்து உடன் நிறைவேற்ற வேண்டிய பணி இது. தலைமைச் செயலாளர் அவர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன். இது தொடர்பான சமூக ஆர்வலர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்றையும் தங்களின் பார்வைக்கு உடன் அனுப்பி வைக்கின்றேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தண்டோரா முறை ஒழிப்பு, தந்தையை விஞ்சிய தளபதி என்றும் ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகமும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடுவதற்குக் கடுமையான தடை விதிக்கவேண்டும். மீறி ஈடுபடுத்துகிறவர்களைத் தண்டிக்கவேண்டும்” என உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இன்று ( 03.08.2022) கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த சமூக இழிவு துடைக்கப்பட்டுள்ளது; கடந்த 15 ஆண்டுகளாக நான் எழுப்பிவந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முந்தைய ஆட்சியில் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு பி டி ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அகாலமாக மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் 25. 5.2006 அன்று அறிமுகப்படுத்தி அதன் மீது பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டும் வழக்கம்’ ஒழிக்கப்படுவதாக அறிவித்தார். ‘திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 1971இல் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த அதிமுக அரசு மீண்டும் அதை உயிர்ப்பித்தது. தற்போது அது மீண்டும் ஒழிக்கப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் 25.7.2006 அன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் மீது பேசுகிற வாய்ப்பை நான் பெற்றேன். அப்படி பேசுகிற நேரத்தில், “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்கள்.

அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளிலே தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையிலே, நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையிலே வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கின்ற ஒரு முறையாக இருக்கின்றது. எனவே அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றித் தந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஏனோ இந்த வேண்டுகோளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.

அதன் பின்னர், தமிழ்நாடு அரசால் பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அக்குழுவின் முதல் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதாக செய்தி வெளியானது.அவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்திலும் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பலவிதங்களில் நான் முன்வைத்து வந்தேன். கடந்த நாளன்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி 01.08.2022 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உட்னே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் பதிவு செய்தேன்.

அதைப் பல நண்பர்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டார்கள். அதன் காரணமாகவே இப்போது தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழிவைப் போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் முன் வைத்த கோரிக்கை அவருடைய வழியில் சமத்துவ ஆட்சி செய்யும் அண்ணன் தளபதி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டுவதில் தலைவர் கலைஞரையும் விஞ்சுகிறவராக அண்ணன் தளபதி திகழ்கிறார். ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்த சமூக இழிவை ஒழித்த அவருக்கு ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், “தமிழக தலைமைச் செயலர் தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது. இதேபோல், ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் ராஜாங்கம் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தண்டோரா போடும் முறையை கைவிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தமிழக தலைமைச் செயலர். மாறிவரும் நவீன மதிப்பீடுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளும் விதமாக இச்செயல் அமைந்திருக்கிறது.

இதேபோல் ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான பிற பிரச்சினைகளையும் நவீன கால கண்ணோட்டத்துடன் படி அணுக அரசு முன்வர வேண்டும். குறிப்பாக அண்மை புள்ளிவிவரம் ஒன்று துப்புரவு பணியாளர் இறப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலாளர் தன் கடிதத்தில் தண்டோரா முறையை பற்றி கூறும்போது "சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்ததாக" குறிப்பிட்டிருந்தாலும் இது பெரும்பாலும் தலித் சமூகத்தின் குரலாகவே இருந்து வந்தது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களிலும் இப்பிரச்சினை அவ்வப்போது எழுதப்பட்டு வந்திருக்கிறது. குரல் எழுப்பியோர், அறிவிப்பு செய்த அரசு என யாவரும் பாராட்டிற்குரியோர்.

2006 ஆம் ஆண்டு "தண்டோரா முறையைத் தடை செய்க: இழிதொழில் மறுப்பும் தலித் முன்னோடிகளும் - சில குறிப்புகள்"என்ற தலைப்பிலான என்னுடைய கட்டுரை அம்ருதா இதழில் வெளியானது. என்னுடைய முதல் நூலான சனநாயகமற்ற சனநாயகம் நூலில் (சனவரி 2007)அக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“தண்டோராவுக்கு தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டரில் பதிவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் தமிழ்நாடு 'திராவிட மாடல்' அரசு வெல்லட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Iraianbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment