தமிழகத்தில் முதன்முறையாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்கும்- அர்ச்சகர் பயிர்ச்சி பள்ளி ஒன்றில், மூன்று பெண்களுக்கு- கோவில் அர்ச்சகர்களாக தமிழக அரசு பயிற்சி அளித்துள்ளது.
இது "சமத்துவத்தின் புதிய சகாப்தம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
'பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை!
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...' என்று அவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
எஸ். ரம்யா, எஸ். கிருஷ்ணவேணி, என். ரஞ்சிதா ஆகியோர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலுடன் தொடர்புடைய அர்ச்சகர் பயிர்ச்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர்.
2007ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ திட்டம் தொடங்கப்பட்டது. 2021ல் தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அர்ச்சகர் பயிற்சிக்கான இத்தகைய நிறுவனங்கள் புத்துயிர் பெற்றன.
மூன்று பெண்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இன்னும் ஒரு வருடத்தை முக்கிய கோவில்களில் செலவழிப்பார்கள், அதன் பிறகு, தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.
கணிதத்தில் எம்.எஸ்.சி முடித்த ரம்யா, வங்கி அல்லது ஆசிரியர் வேலையில் சேரலாம் என்று எதிர்பார்த்திருந்தார், அப்போது அனைத்து சாதியைச் சேர்ந்த பெண்களையும் அர்ச்சகர்களாகப் பயிற்சி பெற அழைக்கும் அறிவிப்பைப் பார்த்த பிறகு அவர் இத்திட்டத்தில் சேர முடிவு செய்தார்.
‘நான் ஆர்வமாக இருந்தேன்... எல்லா வேலைகளிலும் பெண்கள் இருக்கும்போது, நான் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மேலும், கோயில்கள், சடங்குகள் மற்றும் பூஜைகள் எனக்கு அந்நியம் அல்ல,’ என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
மந்திரங்களைக் கற்றுக்கொள்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, என்ற ரம்யா வரலாற்று நகரமான ஸ்ரீரங்கத்தில் பயிற்சியின் தொடக்கத்தை நினைவு கூர்ந்தார்.
’பயிற்சி பெறுபவர்களுக்கு சடங்குகளின் நுணுக்கங்களை கற்பித்ததற்காக ஸ்ரீரங்கத்தின் அர்ச்சகர் சுந்தர் பட்டுக்கு நன்றி.
இது கடவுளை வணங்குவது, ஆனால் இதற்கான செயல்முறை துல்லியமானது மற்றும் கூர்மையானது. இது தலை முதல் கால் வரை ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல… பஞ்சரத்தினம் ஆகமம் பற்றி அறிந்தோம். இது முக்கியமாக தமிழில், சில சமஸ்கிருத கூறுகளையும் கொண்டுள்ளது’, என்று அவர் கூறினார்.
எனது தாத்தா மற்றும் மாமாக்கள் அனைவரும் எங்கள் கிராமத்தில் சிறிய விழாக்களுக்கு பூஜைகளை நடத்துவதை நன்கு அறிந்தவர்கள், நானும் கூட கிரஹபிரவேசம் உட்பட இரண்டு முறை 'ஹோமங்களில்' கலந்து கொண்டேன், என்றார் ரம்யா..
அதிகாரப்பூர்வமாக அர்ச்சகராக நியமிக்கப்படும் முன், மேலும் ஒரு வருடப் பயிற்சிக்குத் தயாராகும் ரம்யா, ’பெண்கள் அர்ச்சகராக ஆவதற்கு எங்களுக்கு எந்த பயமும் இல்லை, மேலும் இந்த புனிதமான பாத்திரத்தை இன்னும் அதிகமான பெண்கள் ஏற்க இது வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் குழுவில் மூன்று பெண்கள் உட்பட 22 மாணவர்கள் இருந்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய சமீபத்திய பேட்சில், 17 பெண்கள் உள்ளனர்! என்றார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அனுமதிக்கும் அரசின் திட்டத்தின் கீழ், மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 94 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். பல கோவில்களில் பெண்கள் அர்ச்சகராக வருவதை தடை செய்த வரலாற்று முன்னுதாரணத்தை இது உடைத்துவிட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், மாநிலத்தில் உள்ள சில கோவில்களில் ஏற்கனவே பெண் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் அதிக அளவில் பெண்கள் சேருவார்கள்.
பெண்கள் கோவில் அர்ச்சகராக வருவதற்கு எந்த சாத்தியமான எதிர்ப்பையும் சமாளிக்க அரசாங்கம் நம்புகிறது, என்றார்…
ஜூன் மாதம், கோவில்களில் பூஜை செய்ய அனுமதி கோரி பல பெண்களிடமிருந்து மனுக்கள் வந்ததாக அமைச்சர் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் ஆகமக் கொள்கைகளைப் பின்பற்றும் கோயில்களில் பெண் அர்ச்சகர்கள் என்ற எண்ணம் புதிது என்றாலும், மாநிலத்தில் சுடலை மாடன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, பாவாடைராயன் அல்லது காளியம்மா, மாரியம்மா, பேச்சியாயி, கருப்பாயி, செல்லாத்தம்மா - போன்ற பல நாட்டுப்புற தெய்வங்கள் உள்ளன. இங்கு ஏற்கனவே பல தசாப்தங்களாக, பெண் பூசாரிகளே சடங்குகளை செய்து கோயில்களை நடத்தி வருகின்றனர்.
Read in English: In a first, Tamil Nadu trains three women as temple priests
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.