தமிழ்நாடு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை போல் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கடந்த ஆக.25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடங்கப் பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உணவு தயாரிக்க மகளில் சுய உதவிக் குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பெண் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளிகளில் உணவு தயாரிக்க கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜகோபால் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு நடத்தினார்.
அப்போது தங்கள் குழந்தைகளுக்கு பட்டியலின பெண் சமைத்து கொடுக்க கூடாது என அங்கிருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆட்சியாளர் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். மேலும் இந்தப் பள்ளி தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தப் பள்ளியில் வீடியோ, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“