/indian-express-tamil/media/media_files/2025/03/23/14mCpGvRUbc8Vj4gtxVh.jpg)
பாம்பன் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறந்துவைப்பார் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில் தூக்கு பாலம் சேதமடைந்ததால், பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமரின் வருகைக்காக திறப்பு விழா தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் பாலம் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் சில மாதங்களாக கிடப்பில் இருக்கின்றது.
இந்தநிலையில் வரும் ஏப்ரல் மாதம் துவக்கத்திலோ அல்லது இறுதி வாரத்திலோ பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்னக ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
பாம்பன் சாலை பாலத்திலிருந்து புதிய ரயில் பாலம், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆலய வளாகம், மண்டபம் முகாம் ஹெலிபேட் தளம், குந்துகால், மண்டபம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷார் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள், காவல்துறை, மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளுடன், விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் திறந்து வைக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும், விரைவில் பிரதமர் மோடி நேரில் கலந்துக்கொண்டு பாம்பன் பாலம் திறப்பு விழா நடைபெறும். பழைய பாலம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். புதிய பாலத்துக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பெயர் வைப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.