கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி : இம்மாத இறுதியில் அறிவிப்பு

இம்மாத இறுதியில் கமல் தனது புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அருண் ஜனார்த்தனன்

தமிழக அரசியலை, கடந்த அரை நூற்றாண்டுகளாக, சினிமா துறையைச் சார்ந்தவர்களே கோலோச்சி வருகின்றனர். எம்.ஜி.ராமச்சந்திரனில் இருந்து தொடங்கி ஜெயலலிதா, விஜயகாந்த் என அந்த பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கிறது. இதில் தற்போதைய புது வரவாக இருக்கப் போவது நடிகர் கமல்ஹாசன் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

கமல்ஹாசனுக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடைய நண்பர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு’ பிரத்யேகமாக இந்த தகவலை அளித்துள்ளார். இம்மாத இறுதியில் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து கமல்ஹாசன் இம்மாதமே கட்சியை தொடங்குவதாகவும் அவர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

“கமல் தனது அரசியல் கட்சி அறிவிப்பு குறித்த பணிகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும், விஜயதசமி அல்லது காந்தி ஜெயந்தி அன்று இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு உள்ளார்” என அந்த நபர் கூறியுள்ளார்.

“கமல் தனது ரசிகர் மன்றங்களின் தலைவர்களுடன் இன்னமும் இதுகுறித்த இறுதி விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் உடனே அவர்களிடம் அரசியல் கட்சி குறித்த தகவலை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் கமல் உள்ளார்” என்றும் அவர் கூறினார்.

கமல்ஹாசனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொருவர் நம்மிடம் கூறுகையில், “தமிழகத்தில் இப்போது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக அரசியலில் நுழைந்துவிட வேண்டும் என கமல் நினைக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சியான திமுக, வேறு ஏதேனும் பெரிய கட்சியுடன் கைக்கோர்க்கும் முன்பும், ஆளும் அதிமுக, அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பாகவும், தான் கட்சி ஆரம்பித்துவிட வேண்டும் என்று கமல் நினைக்கிறார்” என அவர் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “அரசியலில் நுழைவதற்கு இதுதான் மிகவும் முக்கியமான தருணம். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாகியிருப்பதாக கமல் கருதுகிறார். சமூக தளங்களில் தான் பதிவிடும் கருத்துகளுக்கு மக்கள் தரும் பேராதரவை கமல் உன்னிப்பாக கவனித்து வருகிறார். தான் பெரிதும் மதிக்கும் சில ரசிகர்களிடம், கட்சி குறித்த ஆலோசனையில் தீவிரமாக கமல் ஈடுபட்டுள்ளார். புதிய கட்சிக்கான வரைவு ஆவணங்கள் உருவாக்குவது குறித்தும் கமல் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசிய பின் திருவனந்தபுரத்தில் கமல் பேட்டியளித்த போது, ‘அரசியலில் நுழைவது குறித்து யோசித்து வருவதாகவும், யார் பக்கமும் சாராமல் அந்த முடிவு இருக்கும்’ என்றும் கமல் கூறியிருந்தார்.

கமலின் நெருங்கிய வட்டாரம், “4000 வேட்பாளர்களுடன், வரும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குவதன் மூலம், அடிமட்ட மக்களுக்காக வேலை செய்து அவர்களின் நன்மதிப்பை பெற இது சிறந்த வாய்ப்பு என கமல் கருதுகிறார்” என தெரிவித்துள்ளது.

“தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறந்த கமல் ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு தருவதன் மூலம் மக்களுக்கு அவர்கள் சேவை செய்ய அது வாய்ப்பாக அமையும்” என்றும் கமலின் நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

கமல்ஹாசனின் வேறொரு நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், “வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையிலும், செப்.,16-ஆம் தேதி கோழிக்கோட்டிலும் கமல் இரு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார். கமலின் அரசியல் என்ட்ரி திட்டங்கள் குறித்து அதிலிருந்து நமக்கு சில தகவல்கள் கிடைக்க உள்ளது. கோழிக்கோட்டில், வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக தேசிய கருத்தரங்கில் கமல் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். கேரளாவின் மூத்த சிபிஐ(எம்) தலைவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்” என்றார்.

இடதுசாரித் தலைவர்களுடன் கமல் நெருங்கி இருப்பதைப் பற்றி கேட்டபோது, “கடந்த சில மாதங்களாக தனது அரசியல் திட்டங்களை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் பல மக்களை சந்தித்தார். வழக்கமான அரசியல் கட்சியாக இருக்கக் கூடாது என கமல் நினைக்கிறார். மக்கள் அரசியல்மயமாக்கப்பட வேண்டும் என்று அவர் நம்புகிறார். வரவிருக்கும் உள்ளூர் தேர்தல்களில் கமல் முக்கிய பங்கு வகிப்பார்” என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.

இதுதொடர்பாக கமலின் செய்தித் தொடர்பாளரை நாம் தொடர்புக் கொண்டு பேசிய போது அவர், “இது தொடர்பாக நான் கமலிடம் பேசுகிறேன். அவர் ஏதும் கருத்து சொன்னால், உங்களிடம் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் பேசிய போது, “கமல் இப்போது கூறும் சர்ச்சையான கருத்துகள் அனைத்தும், அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவை பிரபலப்படுத்தத் தான். மேலும், அவரது கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகத் தானே தவிர, அரசியல் நுழைவிற்காக இல்லை” என்றார்.

அரசியல் ஆய்வாளர் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுகுறித்து பேசுகையில், “இந்தச் சூழ்நிலையில் கமலின் அரசியல் பிரவேசம் ஒரு “தயார் செய்யப்படாத நடவடிக்கை” என்று சொல்லலாம். நம்முடைய சிவில் சமூகத்தில் கமல் ஒரு செல்வாக்கு மிக்க முகம். அதனை பயன்படுத்தி அவர் மூலம் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் தங்களது வாக்குகளை உயர்த்தலாம். ஆனால், அந்த மிகப்பெரிய கட்சிகளை மீறி அவரால் மிகப்பெரிய பங்கினை செய்துவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக, அரசியல் வருகை குறித்த ரஜினியின் பேச்சு இருந்தது. ஆனால், அந்த திசையை நோக்கி அவர் எந்த அடியும் இதுவரை எடுத்து வைத்ததாக தெரியவில்லை.

தமிழில் மொழிப்பெயர்ப்பு: ஞா.அன்பரசன்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: In chennai churn kamal haasan set to launch party

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com