தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் மருதமலை கோவில், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை தெற்கு தீயணைப்பு நிலையம், கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அந்தக் குழுவினர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஆய்வின் இறுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி குழுவின் தலைவர் உதயசூரியன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயசூரியன்.
அரசு உறுதிமொழி குழு சார்பாக நீலகிரி மற்றும் கோவையில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் கோவை மாவட்டத்தில் 9 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் 219 கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இவற்றில் 59 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
25 கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது. 135 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது 80 முதல் 90 சதவீதம் வரை பணிகள் நடந்து வருகிறது.
கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டு பதிவு செய்யப்பட்டது.
மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே அங்கு ரூ.3 கோடியில் மின்தூக்கி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதனை மறு மதிப்பீடு செய்து ரூ.5.5 கோடியில் 2 மின் தூக்கிகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மின்தூக்கியிலும் தலா 20 பேர் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. அதில் அடிவாரத்தில் இருந்து கோபுர வாசல் வரை ஒரு மின் தூக்கியும், கோபுர வாசலில் இருந்து கோவில் வரை மற்றொரு மின் தூக்கியும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளன.
இதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம் போன்ற 7 கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக 50 சதவீதம் பாரதியார் பல்கலைக்கழகம் நிதியிலும் மீதமுள்ள 50 சதவீதம் நபார்டு வங்கி மூலமாகவும் செயல்படுத்த துறை செயலாளரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறைக்கு கோவையில் ரூ .3 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்தபோது தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்குள்ள ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லை என்று கூறினர்.
கோவை அரசு மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.1.5 கோடியில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 46 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ள கட்டிடத்தில் ஆய்வு செய்ததில் அதை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூலம் பாரதியாரின் நூல்களை பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து அனுப்ப துணைவேந்தரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிக்கும் மாணவ-மாணவிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், மலைவாழ் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் 10 பள்ளிக்கூடங்களை தேர்வு செய்து கல்வி உபகரணங்கள், அறிவுத்திறன் பெருக்குவதற்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று இந்த குழுவின் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil