தமிழக அரசியலில் திமுகவும் அதிமுகவும் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில், அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முதல்முறையாக திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அண்ணா தலைமையில் 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. 1969ம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு, நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பதவியேற்றார். அதற்கு பிறகு, கருணாநிதி முதலமைச்சரானார். பின்னாளில், திமுகவின் தலைவரானார். சினிமா நடிகராகவும் திமுகவைச் சேர்ந்தவராகவும் அறியப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் திமுகவில் அமைச்சராக பதவி வகித்தார்.
கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நண்பர்களாக இருந்த நிலையில், திமுக நிர்வாகத்தின் மீது விமர்சனங்கலை வைத்த எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார். அதற்கு பிறகு திமுகவும் அதிமுகவும் எதிரும் புதிருமாக பரம வைரி கட்சிகளானது. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைமை ஏற்ற பின்னர் மேலும் அந்த எதிர்ப்பு வலுவடைந்தது. திமுகவில் கருணாநிதியும் அதிமுகவில் ஜெயலலிதாவும் மறைந்த பின்னரும் இரு கட்சிகளுக்கு இடையேயான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன. இரு கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் அரசியல் மேடைகளில் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இரண்டு கட்சிகளும் வலிமையான எதிரிகளாக தொடர்கின்றனர்.
இந்த நிலையில்தான், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மாலை அணிவிப்பார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடப்படும் என்று ஆளும் கட்சியான திமுக அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு எம்ஜிஆருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து பேசினார். தமிழக அரசியலில் திமுகவின் பரம வைரி எதிர்க்கட்சியாக கருதப்படும் அதிமுக தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர் சிலைக்கு திமுக அமைச்சர்களும் எம்.பி.க்களும் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
உண்மையில், தமிழக அரசு, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை அறிவித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் நாடகக் கலைஞராக தொடங்கி, சினிமா நடிகராக, பின்னர் முதலமைச்சராக அவர் செய்த பங்களிப்பு உட்பட அவருடைய வாழ்க்கை சுருக்கத்தையும் வெளியிட்டது.
“எம்.ஜி.ஆர் ஒரு காந்தியவாதியாகத் தனது அரசியல் பயணத்தை தொடங்கினாலும், தந்தை பெரியார், அண்ணாவின் சிந்தனைகள், கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1953ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இணைந்தார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1960-களின் பிற்பகுதியில் திமுகவின் பொருளாளராக இருந்ததை நினைவுகூரப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் செயல்படுத்திய பல்வேறு முன்னோடி நலத் திட்டங்களைக் குறிப்பிட்டு அவரது ஆட்சிக் காலத்தைப் பாராட்டியுள்ளது. சத்துணவுத் திட்டம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கியது, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள் வழங்கியதை ஐ.நா பாராட்டியது உள்பட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையேயான நட்பைக் கொண்டாட நினைத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு, அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆர் கருணாநிதியுடன் தனது வாழ்நாள் இறுதி வரை நட்பைப் பேணி வந்ததாகக் கூறினார். 1990-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நினைவாக சிறப்பு தபால் தலையை வெளியிட்டு கருணாநிதி அவரை கவுரவித்ததையும் அரசு நினைவுபடுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தபடி, முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் படத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக திமுக தலைவர்கள், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மலர் தூவி மரியாதை செய்த புகைப்படம் சமூக ஊடகங்களில் திமுகவினரால் பகிரப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், சிலர் சமூக ஊடகங்களில், திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.