சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர், ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் வசித்து வருபவர் பார்த்திபன். இவருடைய மனைவி அனு. இவர்களுடைய மகள் பாவனா(வயது 7). இவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
அதே அடுக்குமாடி குடியிருப்பு ‘டி’ பிளாக்கை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் யுவஸ்ரீ(9). இவளும், அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
மழை காரணமாக நவம்பர் 1ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்தனர்.
அக்டோபர் 31ம் தேதி, இரவு பெய்த மழையால் அந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
ராஜரத்தினம் நகர் தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டியில் இருந்து மற்றொரு மின்சார பெட்டிக்கு தரை வழியாக மின்சார வயர் செல்கிறது. மண்ணில் புதைக்கப்படாமல் கிடந்த அந்த மின்வயர் சேதம் அடைந்து இருந்தது.
தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் அந்த மின்வயரும் மூழ்கி கிடந்ததால் அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது.
இதை அறியாமல் சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ இருவரும் தெருவில் நேற்று மதியம் விளையாடியபடியே அருகில் உள்ள கடைக்கு நேற்று சென்றனர்.
அப்போது சிறுமிகள் இருவரும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்த மழைநீரில் எதிர்பாராதவிதமாக கால் வைத்தனர். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது. அலறி அடித்தபடி இருவரும் சரிந்து விழுந்து, இறந்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது குறித்து அரசு விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘கொடுங்கையூரில் பலியான 2 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.