Advertisment

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க சங்கிலி, பைக், மொபைல்; சென்னை, கோவளத்தில் புது முயற்சி

In Kovalam village near Chennai, a lucky draw with gifts for taking Covid vaccine: தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசமாக பிரியாணி, தினசரி ரீசார்ஜ் கூப்பன்கள், ஒரு தங்கச் சங்கிலி, இரு சக்கர வாகனம், குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் அல்லது மொபைல் போன் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்குகிறார்கள்.

author-image
WebDesk
New Update
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க சங்கிலி, பைக், மொபைல்; சென்னை, கோவளத்தில் புது முயற்சி

தமிழ்நாட்டின் சென்னைக்கு வெளியே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீன்பிடி குக்கிராமமான கோவளத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் நபர்களுக்கு பரிசு கூப்பன்களை சில அமைப்புகள் வழங்கியுள்ளன. கோவளத்தை கொரோனா இல்லாத கிராமமாக மாற்றும் நோக்கில், அமைப்பாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு இலவசமாக பிரியாணி, தினசரி ரீசார்ஜ் கூப்பன்கள், ஒரு தங்கச் சங்கிலி, இரு சக்கர வாகனம், குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம் அல்லது மொபைல் போன் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்குகிறார்கள்.

Advertisment

publive-image

உள்ளூர் என்ஜிஓ எஸ்.டி.எஸ் அறக்கட்டளை இந்த இயக்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. சிராஜ் மற்றும் சி.என்.ராமதாஸ் சாம்பியன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட் நிதியுதவி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னர், இந்த தடுப்பூசி இயக்கம் மே 29 அன்று புருனோ அரண்மனை திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது. முதல் பயனாளிகளாக கிராமத்தின் மூத்த தம்பதியினர் சுசிலா (88) மற்றும் சுப்பிரமணி (91), ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

publive-image

கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. ஆனால் தடுப்பூசிகளின் விநியோகத்தைப் பொறுத்து நேரத்தை நீட்டிக்க அமைப்பாளர்கள் விரும்புகிறார்கள்.

இந்த தடுப்பூசி இயக்கத்தை ஏற்பாடு செய்த தன்னார்வலர்கள், கிராமத்தில் தடுப்பூசி குறித்த அச்சங்களை நீக்க விரும்புவதாகவும், மேலும் அதிகமான மக்களைக் கவரும் வகையில் தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக “திருவிழா போன்ற சூழ்நிலையை” உருவாக்க விரும்புவதாகவும் கூறினர்.

இந்த தடுப்பூசி இயக்கத்தில் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் கொரோனாவுக்கு எதிராக 98 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று நாட்களில் 345 பேர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 838 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். கோவளத்தில் சுமார் 16,000 பேர் வசிக்கின்றனர், அவர்களில் 18-44 வயது பிரிவில் 6,400 பேர் உள்ளனர்.

publive-image

இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய 22 பேர் கொண்ட எஸ்.டி.எஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் சுந்தர், “தொற்றுநோயின் முதல் அலையின் போது, ​​குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தோம். இரண்டாவது அலையில், ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற வசதிகளை மக்களுக்கு வழங்கினோம்.

“இப்போது, ​​கோவளம் தடுப்பூசிக்கு ஒரு மாதிரி கிராமமாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழகம் முழுவதும் குறைந்தது 50 கிராமங்களில் இதேபோன்ற முகாம்களை அமைப்பதே எங்கள் நோக்கம். ” என்று கூறினார்.

இலாப நோக்கற்ற சி.என்.ராம்தாஸ் சாம்பியன்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்டின் அறங்காவலர் கிரிஷ் ராம்தாஸ், அடுத்த 45 நாட்களில் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் முதல் டோஸ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்திற்கு தடுப்பூசிகளின் விலையைத் தவிர கூடுதலாக சுமார் ரூ .50 லட்சம் வரை செலவாகும் என்று ராம்தாஸ் கூறினார்.

publive-image

1992 ஆம் ஆண்டு டான் பாஸ்கோ பள்ளியின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு சிராக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ராம்தாஸ் மற்றும் டாக்டர் ராஜீவ் பெர்னாண்டோ ஆகியோர் இந்த நிதியை திரட்டியுள்ளனர்.

“இரண்டு வாரங்களுக்கு முன்பு, வேளச்சேரியில் 15 படுக்கைகள் கொண்ட இலவச கொரோனா பராமரிப்பு மையத்தை உருவாக்கினோம். அங்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் பெர்னாண்டோ அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார். நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பினோம், கிராமப்புறங்களுக்கு நாங்கள் அதிகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம், மேலும் ஒரு தடுப்பூசி மையத்தை அமைக்கும் யோசனையுடன் வந்தோம். சுந்தரின் முன்முயற்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால் நாங்கள் அவரிடம் பேசினோம். அதிகமான மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால், அதை ஒரு ‘திருவிழா’ போல மாற்ற பரிசு கூப்பன் என்ற யோசனையை நாங்கள் கொண்டு வந்தோம்,”  என்று ராம்தாஸ் கூறினார்.

இந்த தடுப்பூசி இயக்கத்தின் அமைப்பாளர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டின் பிற கிராமங்களிடமிருந்தும், ஆந்திரா போன்ற மாநிலங்களிடமிருந்தும் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துமாறு அழைப்பு வந்துள்ளது.

தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து வீடியோ செய்திகளைப் பதிவு செய்யுமாறு பல பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களையும் அமைப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Corona Corona Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment