தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு தரப்பில், அக்.24ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு காரணம், அரசு அபராதம் விதித்ததுதான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் நிர்ணயித்த கட்டணம் தொடர்பான விவரங்கள் வெளியாகின.
அதில், சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1930 ஆகவும்; அதிகபட்சமாக ரூபாய் 3070 ஆகவும், கோவைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 2050 ஆகவும்; அதிகபட்ச கட்டணம் ரூபாய் 3,310 ஆகவும், நெல்லைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 2,380 ஆகவும்; அதிகபட்சம் ரூபாய் 3,310 ஆகவும், நாகர்கோவிலுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 2, 610 ஆகவும்; அதிகபட்சமாக ரூபாய் 4,340 ஆகவும், சேலம் கட்டணம் குறைந்தபட்சம் ரூபாய் 1650 ஆகவும்; அதிகபட்சம் ரூபாய் 2500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, விதிமுறைகளை மீறியதற்காக பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து, தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயம் பாண்டியன் கூறுகையில், “விதிமீறல்களில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்தாத பேருந்துகளை வரி செலுத்திய பிறகு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“