Advertisment

புனேயில் மட்டுமல்ல... தமிழகத்திலும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு கஷ்ட காலம்தான்!

'சிறுநீர் கழிக்கணும்-னு மூணு மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன் நிறுத்தவே இல்ல' என போலீசாரிடம் ஆதங்கப்பட்டு பேசிய காணொளியே இதுபோன்ற சம்பவங்களுக்கு ஒரு சான்றாக அமைகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் தொடர்ந்து குறி வைக்கப்படும் ஆர்வலர்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து குறி வைக்கப்படும் ஆர்வலர்கள்!

தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மீது, அரசு தொடர்ந்து குறி வைத்து இன்னல்களுக்கு ஆளாக்குகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. குறிப்பாக சமூக தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் இதுபோன்ற புகார்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இவற்றை முற்றிலுமாக நாம் புறந்தள்ளி விடவும் முடியாது.

Advertisment

அரசு ஒரு திட்டமோ, சட்டமோ கொண்டு வருகிறது எனில், அதை எதிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் தங்கள் கருத்தை தைரியமாக சொல்ல உரிமை உள்ளது. ஆனால், அரசின் திட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற காரணத்திற்காக, கேட்பார் கேள்வி இல்லாமல் அவர்களை கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ ஜனநாயகம் ஆகாது.

எடுத்துக்கட்டாக, மாணவி வளர்மதி, திருமுருகன், பியூஷ் மானுஷ் உள்ளிட்டோர் சமீப காலங்களில் அடிக்கடி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி சமீபத்தில், "சிறுநீர் கழிக்கணும்-னு மூணு மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன் நிறுத்தவே இல்ல' என போலீசாரிடம் ஆதங்கப்பட்டு பேசிய காணொளியே இதுபோன்ற சம்பவங்களுக்கு ஒரு சான்றாக அமைகிறது. அவர் கைது செய்யப்படுவது ஒரு வாடிக்கையான செய்திதான் என்றாலும், சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA- Unlawful activities prevention act) அவர் கைது செய்யப்பட்டது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்தால் இரண்டு ஆண்டுகள் வரை பிணையில் வெளிவரவே முடியாத அளவிற்கு சிறையில் அடைக்க முடியுமாம். இந்தளவிற்கு கடுமையான ஒரு சட்டத்தை திருமுருகன் காந்தி மீது பிரயோகிக்க என்ன காரணம் என்றும் யோசித்தால், 'அப்படி ஒன்றும் ஒர்த்தான சம்பவத்தை அவர் செய்யவில்லையே' என்றே தோன்றுகிறது.

அதேபோல், மாணவி வளர்மதி... சமீபத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு, கேரள வெள்ள நிவாரணப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வளர்மதியை, போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அவரை கைது செய்த போது பெண் போலீசார்கள் அங்கு இல்லை என கூறப்படுகிறது. இதனை வன்மையாக கண்டித்துள்ள இந்திய தேசிய மாதர் சங்கம், பெண்கள் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட பல பெண்கள் சார்ந்த அமைப்புகள், "மக்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவி வளர்மதி மீது தாக்குதல் நடத்தி தொடர்ச்சியாக அடக்குமுறையை ஏவி வருகிறார்கள்" என்று குற்றம் சாட்டியுள்ளனர். வளர்மதி எங்கு சென்றாலும், அங்கு போலீஸ் அவரை சுற்றி வளைப்பதிலேயே குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பியூஷ் மனுஷும் இதேபோன்று கைது செய்யப்படுவதும், விடுதலையாவதும் தொடர் கதையாகி வருகிறது. தமிழக அரசின் சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக சமீபத்தில் இவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மட்டுமல்ல, நடிகர் மன்சூர் அலிகான், ஃபாத்திமா பாபு, ஹரி ராகவன் என்று லிஸ்ட் நீண்டுக் கொண்டு தான் செல்கிறது. புதிய திட்டம் என்று ஒன்றை அமல்படுத்த முயன்றால், அங்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்தேயிருக்கும் என்பதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டால் நல்லது.

புனேயில் 5 சமூக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், தேசிய விவாதமாக மாறிக்கொண்டிருக்கும் சூழல் இது! இந்த நேரத்தில் தமிழகத்திலும் அதே போன்ற கைதுகள் நடப்பதை விவாதத்திற்கு எடுத்துச் செல்ல மனித உரிமை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? என்ன செய்யப் போகிறது அரசு?

Salem Student Valarmathi Thirumurugan Gandhi Piyush Manush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment