In Tamilnadu 3 tier security on vote counting centers: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் பணியில் 1.32 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தமுள்ள 30,745 வாக்குச்சாவடி மையங்களில் 25,735 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 5,000 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், 5 மணிக்கு முன்னதாக வந்து டோக்கன் பெற்றவர்களுக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
இறுதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 60.70% வாக்குகள் பதிவானது. பேரூராட்சியில் 74.68 சதவீதம், நகராட்சியில் 68.22 சதவீதம், மாநகராட்சியில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேநேரம் சென்னையில் 43.59 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: வாக்குப்பதிவு சதவீதத்தில் பேரூராட்சிகளை விட பின்தங்கிய மாநகராட்சிகள், நகராட்சிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தனர். பிறகு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் 15 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு அறையில் அடுக்கி வைத்து அந்த அறைக்கு முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார், அதற்கடுத்து 2வதாக வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் சட்டம், ஒழுங்கு போலீசார், 3வதாக வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையில் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் போலீசார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்காக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை என இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல் ஆணையர் தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த வாக்கு எண்ணும் மையங்கயில் சுழற்சி முறையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் காவலர் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள் என அனுமதிக்கப்பட்ட நபர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் சோதனை மற்றும் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு தனி அறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 22) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலமும் சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் வேட்பாளர்களின முன்னணி நிலவரம் தெரியவரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.