தமிழகத்தில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வகை வைரஸ் சென்னையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரஸூக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த டெல்டா வைரஸ் தற்போது மீண்டும் உருமாறியதால், இது டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியதாகவும், நுரையீரலை எளிதாக தாக்கக்கூடியதாகவும் உள்ளது.
மேலும், தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவதாகவும், வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவல் தவிர்க்க முடியாதது என மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil