Election results 2019 : மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை ( மே 23ம் தேதி) காலை 8 மணிக்கு எண்ணப்படும் பணி துவங்கும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறியதாவது, வாக்கு எண்ணும் பணிகளில், 16,125 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களில் 15,904 ஊழியர்கள் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளையும், 225 ஊழியர்கள், சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலை 8 மணியளவில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளின் எண்ணிக்கை 30 நிமிடங்களில் முடிவடையும். அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
தேர்தல் ஆணையவிதிமுறைகளின்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலிருந்தும் 5 ஓட்டுச்சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு VVPAT இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கு பிறகு, இந்த விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். ஒப்புகை சீட்டுகள் எண்ணுவதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் மாறுபடும். திருவள்ளூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை 34 சுற்றுக்களாக நடத்தப்படும். ( அதிக சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கை) மத்திய சென்னை தொகுதியில் 19 சுற்றுக்களாக ( குறைந்த சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கை)வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பேப்பர் மற்றும் பென்சில் மட்டுமே கொண்டுவர அனுமதி. பேனா கொண்டுவர அனுமதியில்லை என்று சத்யபிரதா சாஹூ கூறினார்.
திமுக மனு : ஒப்புகை சீட்டு எண்ணிக்கையின் போதும், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு வழங்கியிருந்தது. இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.