coimbatore | கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற அவசர கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு தீர்மானம் போடப்பட்டது.
47 ஏக்கரில், அமைய உள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு 99.44 கோடி ரூபாய், கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செம்மொழி பூங்காவிற்கு குழாய் அமைக்க 7.83 கோடி ரூபாய், செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு 25.56 கோடி ரூபாய், கலையரங்கம் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைப்பதற்கு 6.38 கோடிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வ.உ.சி பூங்கா வேண்டுமென வலியுறுத்தியும் விக்டோரியா ஹால் முன்பு முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் "திமுக மேயரே கோவையின் அடையாளமான வ.உ.சி உயிரியல் பூங்கா வேண்டும்" என பதாகையுடன் முழக்கமிட்டனர்.
இது குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறுகையில், “செம்மொழி பூங்கா விற்கு 200 கோடி ரூபாய் அறிவித்த நிலையில், தற்போது பூங்கா அமைக்க அவசர கதியில் தீர்மானத்தை கொண்டு வந்து அவசர கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே பூங்கா இடங்களில் கட்டிடங்கள் கட்ட கூடாது என தமிழகத்தில் அறிவிப்புகள் இருக்கின்ற நேரத்தில், கோவை மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்க போகிறோம் என கூறுவதாகவும் கோவை மக்களுக்கு இது தேவையா என கேள்வி எழுப்பினார்.
இந்த 47 ஏக்கரில் கூட்டரங்கம் அமைப்பதற்கு பதிலாக உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கலாம் எனவும் அதைவிடுத்து கூட்டரங்கம் அமைப்பது காசை வீணடிக்கும் செயல் என தெரிவித்தார்.
சென்னை வண்டலூருக்கு அடுத்தபடியாக கோவையில் தான்
உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டதாக வ.உ.சி பூங்காவை குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போது அந்த வ.உ.சி பூங்காவும் மூடப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். மேலும் கோவை மாநகராட்சி மேல் பல்வேறு இடங்களில் செம்மொழிப் பூங்கா என்ற பெயரில் பார்க் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட அவர் அந்த பூங்காவிற்கு பேரறிஞர் அண்ணா அல்லது அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்களை வைத்தால் அவர்களை கௌரவிப்பது போன்று இருக்கும் என தெரிவித்தார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.