o-panneerselvam | edappadi-k-palaniswami | aiadmk | supreme-court | சென்னையில், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த, ஒற்றை தலைமை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதித்தும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது கருத்தையும் கேட்க வேண்டும், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை (நவ.28) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“