scorecardresearch

ஒரே நேரத்தில் 10,000 பேர் வர முடியும்: பஞ்சபூர் பஸ் நிலைய வசதிகள் பற்றி கே.என் நேரு பேட்டி

திருச்சியில், சென்னையில் உள்ளது போல் மிகப்பெரிய மால் ஒன்றை கட்ட திட்டமிட்டிருப்பதாக பஞ்சப்பூர் பேருந்து நிலைய அடிப்படை பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 10,000 பேர் வர முடியும்: பஞ்சபூர் பஸ் நிலைய வசதிகள் பற்றி கே.என் நேரு பேட்டி
Panjapur bus stands in Trichy

திருச்சியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்டமாக ரூ.20.10 கோடி மதிப்பிலான கிராவல் மண் நிரப்பும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் சேவை பயன்பாட்டிற்கான பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்;  திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.390 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். 30 ஏக்கர் பரப்பளவில் டெர்மினல் மற்றும் பேருந்து நிலைய பணிகள் நடைபெற உள்ளது.

புதிதாக அமையவிருக்கும் பேருந்து நிலையத்தில் 404 பேருந்துகள் தாராளமாக நிற்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் இந்த பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

தெற்கு டெர்மினல் பகுதியில் மொத்த லோடு வாகனங்களும் நிற்கும். மேலும் 28 ஏக்கர் பரப்பளவில் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட் அமையவிருக்கிறது. சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய மேம்பாலம் அமைக்கப்படும்.

தற்போது பஞ்சப்பூர் பைபாஸ் சாலைக்கு தேவையான நிலங்களை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தி விட்டார்கள். ஆகவே அந்தப் பணிகளும் நடைபெறவிருக்கிறது.

மேலும் மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் பெரிய மால் ஒன்றும், அதன் பின்னால் வர்த்தக மையம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியை பொருத்தமட்டில் பாதாள சாக்கடை பணிகள் சற்று தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் திருச்சி மாநகரில் 75 சதவீத சாலைகள் போடப்படும்.

மேலும் 7 பெரிய சாலைகள் 7, 8 நாட்களில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கான டெண்டர் அனைத்தும் விடப்பட்டு விட்டது. பெரிய அளவில் தூய்மை பணியாளர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்வதை காட்டிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை தரம் பிரித்து மக்களே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் கலைஞர் பிறந்த நாளில் மெகா தூய்மை பணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 7,200 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூர் பேருந்து நிலைய அமைவிடத்தில் மூன்றடி ஆழத்துக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற பணிகள் டெண்டர் விடும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த டெண்டர் பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடையும். அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றேகால் வருடத்தில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு ரூ.390 கோடிக்கு அரசாணை வெளியிட்டு இருக்கும் நிலையில் பேருந்து நிலையம் வராது என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறை நடைமுறையில் உள்ளது. சென்னை பெருங்களத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு 400 ஏக்கர் நிலத்தை பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அது மட்டுமல்லாமல் சென்னையில் மரக்கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிப்பது, காய்கறி கழிவிலிருந்து கேஸ் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். பாதாள சாக்கடை இல்லாத பேரூராட்சி பகுதிகளில் கழிவுகளை காய வைத்து உரமாக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார்,  நகரப்பொறியாளர்(பொ) சிவபாதம், செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Inauguration ceremony of panjapur bus stands in trichy