உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் ஜன.22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க தலைவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். உ.பி பா.ஜ.க அரசு மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ராமர் கோயில் விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க நிகழ்ச்சி என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சம் பா.ஜ.கவுக்கு இல்லை. இதை மறைக்கவும் மக்கள் கவனத்தை திசை திருப்பவும் ராமர் கோயில் கட்டியதை தனது சாதனையாக காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள் எனச் சாடியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-ல் ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் பாஜகவுக்கு இல்லை. இதை மறைக்கவும் மக்கள் கவனத்தை திசை திருப்பவும் ராமர் கோயில் கட்டியதை தனது சாதனையாக காட்டி, தோல்வியை மறைக்க நினைக்கிறார்கள்.
2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில் எந்த வாக்குறுதியை இந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தார்களே அதில் ஏதாவது செய்தார்களா என்றால் அதுவும் இல்லை; நாட்டு மக்களுக்கு பாஜக கொடுத்ததெல்லாம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
மழை, புயல் காலங்களில் தர வேண்டிய நிவாரணங்களைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் அநீதி நடக்கிறது. இப்படி அனைத்து வகையிலும் மக்களைப் பத்தாண்டு காலமாக வேட்டையாடி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இன்னும் முழுமையாகக் கட்டிமுடிக்காத அயோத்தி இராமர் கோயிலைக் கட்டியிருக்கிறோம் என்று சொல்லி வாண வேடிக்கை காட்ட முயல்கிறது.
வெறுப்பரசியலைப் புறந்தள்ளி சகோதரத்துவம் ததும்பும் நல்லிணக்கத்தை நாடும் தி.மு.கழகம், ஒருபோதும் அரசியலை ஆன்மீகத்திலும் - பக்தியில் அரசியலையும் புகுத்தி அரசியல் குளிர் காய்ந்தது இல்லை.
இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை. அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது; அரசியல்சாசன அறத்துக்கு மாறானது; நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல!
இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மீக அறங்களுக்கே எதிரானது ஆகும். கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மீகத் திருவிழாவை பா.ஜ.க.வின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார
பாரதீய ஜனதா கட்சி தனது 'மதராஷ்டிரா'வுக்கான கால்கோள் விழாவைப் போல ஒரு கோயில் விழாவைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு காலம் காலமாக வாழக்கூடிய இந்திய நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் செயலை பா.ஜ.க. தொடர்வதும் நல்லதல்ல!
மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் மூலமாக வெல்ல முடியுமா என்று பார்க்கிறது பாரதீய ஜனதா கட்சி. இதற்கு இந்திய நாட்டு மக்களே தக்க பாடம் கொடுப்பார்கள்" என்பது உறுதி என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.